தமிழகத்தில் கொலைகள் குறைந்துள்ளது - டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்!
TN Law and order DGP info
தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க தமிழக காவல் துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால், 2024ம் ஆண்டில் மிகக் குறைந்த அளவாக 1,563 கொலைகள் நடைபெற்றது.
இது கடந்த 12 ஆண்டில் நடைபெற்ற கொலைகளில் மிகக் குறைந்ததாகும். இதேபோல், இந்த ஆண்டும் கொலைகள் குறைந்து வருகிறது. அதாவது, கடந்த 4 மாதங்களில் 483 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது. காவல் துறையின் தொடர் நடவடிக்கையால் இப்படி கொலைகள் குறைந்துள்ளது.
மேலும், ரவுடிகளின் செயல்பாடுகளை குறைக்கும் வகையில், ரவுடிகள் மீதான குற்ற வழக்குகளை துரிதப்படுத்தி அதிகளவு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டில் 242 ரவடிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டது. குறிப்பாக, 150 ரவுடிகளுக்கு 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் அதிகமாகும். கடந்தாண்டு முதல் 4 மாதங்களில் பழிக்குப்பழியாக 22 பேர் கொலை செய்யப்பட்டனர்.
இந்த ஆண்டில் கடந்த 4 மாதங்களில் பழிக்குப் பழியாக 18 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது. இதற்கு போலீஸார் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையே காரணம். போலீஸாரின் தொடர் கண்காணிப்பால் 326 கொலைகள் தவிர்க்கப்பட்டுள்ளன. அதோடு மட்டும் அல்லாமல் கடந்த நான்கு மாதங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 1,325 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பழிவாங்குதல் மற்றும் கொலைகளை தடுக்கும் வகையில் சிறையில் உள்ள ரவுடிகள் உள்பட சந்தேக நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தமிழகத்தில் குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ளது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
English Summary
TN Law and order DGP info