அரசு மருத்துவமனை குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்: மதுரையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
TN CM Vijay Launches Thaimaman Thanga Mothiram Scheme in Madurai Gold Rings Presented to Newborns
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலின் போது, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கப்படும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க முதன்முறையாக ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் விஜய் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தைக் கடந்த ஜூன் 22-ஆம் தேதி அறிவித்தார்.
திட்டத்தின் மதிப்பீடு மற்றும் முன்னேற்பாடுகள்:
ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீட்டில், ஒவ்வொரு ஆண்டும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் 6.11 லட்சம் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நடப்பாண்டிற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், திட்டம் அறிவிக்கப்பட்ட ஜூன் 22 முதல் செப்டம்பர் 28 வரை பிறந்த குழந்தைகளுக்கு அணிவிப்பதற்காக 1 கிராம் எடையுள்ள 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
மதுரையில் முதலமைச்சரின் பிரம்மாண்டத் தொடக்கம்:
இச்சிறப்புமிக்க திட்டத்தினைத் தொடங்கி வைக்கத் தனி விமானம் மூலம் மதுரை வந்த முதலமைச்சர் விஜய்க்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரத்யேகத் திறந்தவெளி வாகனத்தில் ரோடு-ஷோ மூலம் பெருங்குடி, மண்டேலா நகர், சிந்தாமணி ரிங்ரோடு மற்றும் கருப்பாயூரணி வழியாகப் திரளான பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குச் சென்றடைந்தார். அங்கு நடைபெற்ற விழாவில், இத்திட்டம் குறித்த சிறப்பு காணொலியை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், மேடையில் 30 பச்சிளங் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரங்களை அணிவித்துத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.
மாநிலம் தழுவிய விரிவாக்கம்:
மதுரை மாவட்டத்தில் மட்டும் 6,400 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் வழங்கப்படவுள்ள நிலையில், தமிழகம் முழுவதிலும் உள்ள 107 அரசு மருத்துவமனைகளிலும் இத்திட்டம் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டது. அந்தந்தப் பகுதி அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பாதுகாப்பு பெட்டகங்களில் வைக்கப்பட்டிருந்த தங்க மோதிரங்களை அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு அணிவித்துத் திட்டத்தைச் சிறப்பாகத் தொடங்கி வைத்தனர்.
English Summary
TN CM Vijay Launches Thaimaman Thanga Mothiram Scheme in Madurai Gold Rings Presented to Newborns