குடிநீர் பாட்டில், சர்க்கரை பாக்கெட்களில் மைக்ரோ பிளாஸ்டிக் எச்சரிக்கை வாசகம்: உயர்நீதிமன்றம் மறுஆய்வு செய்ய மறுப்பு!
Madras High Court Refuses to Review Order Mandating Microplastic Warnings on Bottled Water Salt and Sugar
மனித நஞ்சுக்கொடியில் (Placenta) பிளாஸ்டிக் நுண்துகள்கள் (Microplastics) கண்டறியப்பட்டதாக வெளியான தகவலின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் குடிநீர் பாட்டில்கள், சர்க்கரை மற்றும் உப்பு பாக்கெட்களில் இருக்க வாய்ப்புள்ளதால், அவற்றில் சிவப்பு நிறத்தில் எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்ய சுற்றறிக்கை அனுப்புமாறு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு (FSSAI) உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
மனுதாரர்களின் வாதமும் பீதியும்:
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி FSSAI அமைப்பும், உத்தரவை முழுமையாகத் திரும்பப் பெறக் கோரி சுத்தமான சுற்றுச்சூழலுக்கான பெட் பேக்கேஜிங் சங்கமும் (PACE) சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. அம்மனுக்களில், உணவுப் பொருட்களில் மைக்ரோ பிளாஸ்டிக் கலப்பது தொடர்பான சர்வதேச ஆய்வுகளில் இன்னும் இறுதி அறிவியல் முடிவுகள் எட்டப்படவில்லை என்றும், இச்சூழலில் எச்சரிக்கை வாசகங்களைக் கட்டாயமாக்கினால் அது மக்களிடையே தேவையில்லாத அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு:
இம்மனுக்கள் நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. வழக்கினை விசாரித்த நீதிபதிகள், எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற முந்தைய உத்தரவை மறுஆய்வு செய்ய முடியாது எனக் கூறி சீராய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அதேவேளையில், இந்த உணவுப் பொருட்கள் முற்றிலும் பாதுகாப்பற்றவை என்று நீதிமன்றம் கூறவில்லை என்றும், மைக்ரோ பிளாஸ்டிக் தொடர்பான அடுத்தகட்ட அறிவியல் ஆய்வுகளின் தரவுகளுக்கு ஏற்ப எதிர்காலத்தில் மேலதிக உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
English Summary
Madras High Court Refuses to Review Order Mandating Microplastic Warnings on Bottled Water Salt and Sugar