திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்களுக்கு பாலியல் தொல்லை: வீடியோ எடுத்து மிரட்டிய 8 பேர் அதிரடி கைது!
Tiruvannamalai Shocker 8 Arrested for Sexually Harassing and Extorting Women After Girivalam
திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்துத் திரும்பிய அடுத்தடுத்த இரண்டு பெண்களைக் காட்டுக்குள் கடத்திச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்து, ஆபாசமாக வீடியோ எடுத்துப் பணம் பறித்த அதிர்ச்சி வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இக்கோரச் சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் சம்பவம்: தருமபுரி பெண் கடத்தல்
கடந்த 30-ஆம் தேதி இரவு தருமபுரியைச் சேர்ந்த திருமணமான பெண் தன் நண்பர்களுடன் கிரிவலம் முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் செங்கம் சாலை வழியாகத் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். பெரியகோளாப்பாடி பாறை அருகே அவர்கள் நின்றபோது, ஆயுதமேந்திய மர்ம கும்பல் அவர்களை மிரட்டி காட்டுக்குள் இழுத்துச் சென்றது.
பாதிப்பு: அப்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தனர்.
பணப் பறிப்பு: அவர்களை மொபைலில் வீடியோ எடுத்து, ரூ.1 லட்சம் தராவிட்டால் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டினர். பாதிக்கப்பட்டவர்கள் பயந்து ரூ.4,000 ஜி-பே (G-Pay) செய்தும், மீண்டும் மிரட்டல் தொடர்ந்ததால் காவல் எண் 100-ஐத் தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.
இரண்டாம் சம்பவம்: பியூட்டி பார்லர் ஊழியர் துயரம்
மறுநாள் (31-ஆம் தேதி) கிரிவலம் சென்ற உள்ளூர் பியூட்டி பார்லர் பெண் ஊழியர் ஒருவர், களைப்பு காரணமாகத் தன் நண்பருடன் அய்யம்பாளையம் புறவழிச்சாலையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ரவுடி கும்பல், இருவரையும் கொடூரமாகத் தாக்கி வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்று 3 மணி நேரம் சித்திரவதை செய்தது. பெண்ணின் 2 கிராம் கம்மலைப் பறித்ததோடு, மறுநாள் பணம் அனுப்புமாறு மிரட்டி அனுப்பினர்.
5 தனிப்படைகள் அமைத்து அதிரடி கைது
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி ராஜன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில், இந்த இரு கொடூரச் செயல்களிலும் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி ஆடையூர் வாசு (எ) வாசுதேவன் உட்பட ஆகாஷ், தமிழ், அப்பு, ஹரிகரன், சர்மா, அருண்குமார், சிவ கணேசன் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
வழக்கு மற்றும் பறிமுதல்: குற்றவாளிகள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், வழிப்பறி, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கடுமையான பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 6 மொபைல் போன்கள், 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போன்களில் இருந்த தரவுகள் அழிக்கப்பட்டிருந்ததால், வேறு பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதைக் கண்டறிய அவை சைபர் லேப் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
English Summary
Tiruvannamalai Shocker 8 Arrested for Sexually Harassing and Extorting Women After Girivalam