ஜிம்பாப்வேவுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்தியா; விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ள இஷான் கிஷன்..!
Ishan Kishan breaks Virat Kohlis record
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 03 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 02-வது போட்டி இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ரசா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 08 ரன்களில் ஆட்டமிழந்தார். இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி அதிரடியாக விளையாடி 09 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இணைந்த இஷான் கிஷன் மற்றும் துணை கேப்டன் திலக் வர்மா ஜோடி ஜிம்பாப்வே பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. 04-வது விக்கெட்டுக்காக இந்த ஜோடி 94 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் இஷான் கிஷன் 44 பந்துகளில் 09 பவுண்டரிகள் மற்றும் 02 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் எடுத்தார்.
மறுமுனையில் அதிரடி காட்டிய திலக் வர்மா 29 பந்துகளில் 05 பவுண்டரிகள் மற்றும் 03 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 05 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது.
அடுத்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு, இந்திய அணியின் பவுலர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

ஜிம்பாப்வே அணி சார்பில், பிரையன் பென்னட் 32 ரன்களும், தடிவனாஷே மருமானி 24 ரன்களும் எடுத்ததே ஜிம்பாப்வே வீரர்களின் அதிகபட்ச ஸ்கோராகும். அடுத்து வந்த முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், அந்த அணி 17.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம், 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 03-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மாலை நடைபெறவுள்ளது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இந்த 02-வது டி20 போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷன் 44 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக, ஒரு காலண்டர் ஆண்டில் (Calendar Year) டி20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை இஷான் கிஷன் முறியடித்துள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டில் விராட் கோலி 20 போட்டிகளில் விளையாடி 781 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், இஷான் கிஷன் 2026-ஆம் ஆண்டில் தனது 22-வது போட்டியில் விளையாடி 783 ரன்களைக் கடந்து, கோலியைப் பின்னுக்குத் தள்ளி இப்பட்டியலில் 03-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஒரு ஆண்டில் அதிக டி20 ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் (1,164 ரன்கள்) மற்றும் அபிஷேக் சர்மா (859 ரன்கள்) ஆகியோருக்கு அடுத்தபடியாக 03-வது இடத்தைப் இஷான் கிஷன் பிடித்துள்ளார்.
English Summary
Ishan Kishan breaks Virat Kohlis record