''மேகதாது விவகாரம் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி கருத்துக்களை கேட்க வேண்டும்''; தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை..!
Edappadi Palaniswami says all party leaders should convene a meeting on the Mekedatu issue
மேகதாது விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களது கருத்துகளைக் கேட்க வேண்டும் எனவும், டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிய வேண்டும் எனவும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், அணை நிரம்பினால்தான் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியும் என்று கார்நாடக காங்கிரஸ் அரசின் முதலமைச்சர் கூறுவது உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானதாகும். சட்ட ரீதியாகவும், தார்மீக அடிப்படையிலும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்து தண்ணீரைப் பெற வேண்டிய த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் இன்றுவரை வாய்மூடி மௌனியாக இருக்கிறார்.

உச்சநீதிமன்றம், 2012-ஆம் ஆண்டு காவிரிப் பிரச்சனை குறித்து மீண்டும் ஒருமுறை கர்நாடகாவோடு தமிழகத்தின் முதலமைச்சர் பேச வேண்டும் என்ற ஒரு யோசனையைத் தெரிவித்தது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கர்நாடக அரசோடு பேசிப் பயனில்லை என்றாலும், உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை ஏற்று கர்நாடக முதலமைச்சரோடு ஒருமுறை பேசுகிறேன் என்று அறிவித்தார்.
அதன்படி 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் தேதி ஜெயலலிதா பெங்களூரு சென்று அப்போதைய கர்நாடக மாநில முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் துறை அமைச்சர்களுடன் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த ஜெயலலிதா; 'தமிழகத்தின் உண்மை நிலையை கர்நாடக அரசில் உள்ளவர்கள் எப்போதுமே புரிந்துகொள்வதில்லை. உச்சநீதிமன்றம் ஒரு நல்லது நடக்கும் என்ற நினைப்பில் பேச்சுவார்த்தை நடத்தச் சொன்னதால், நான் இங்கு வந்தேன். பேசியதில் எந்தப் பயனும் இல்லை என்ற நிலையில் நான் சென்னைக்கு திரும்பிச் செல்கிறேன்' என்று கூறினார்.

இது நடந்து 14 வருடங்கள் ஆனபின்னரும் 'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்' என்று கர்நாடக காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அடம் பிடிக்கிறார்கள். தற்போது, 'தமிழக முதலமைச்சர், காவிரிப் பிரச்சனையில் பேச்சுவார்த்தைக்காக கர்நாடக முதலமைச்சரை சந்திக்கப் போகிறேன்' என்று சொன்ன பிறகு, "யார் வேண்டுமானாலும் வரட்டும், யாரோடும் நாங்கள் பேசத் தயார், எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை' என்று கர்நாடகாவின் காங்கிரஸ் முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
மேலும், தமிழ் நாட்டை பாலைவனமாக்கும், 'மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் விவகாரம் குறித்து பெங்களூரு வரும் தமிழக முதலமைச்சரிடம் பேசுவேன்' என்று கர்நாடக முதலமைச்சர் கூறியதாகச் செய்திகள் வந்துள்ளன.

மேகதாது விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களது கருத்துகளைக் கேட்டும்; டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்தும், பிறகு அனைவரது கருத்துகளின் அடிப்படையில் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உரிய முடிவை எடுக்க வேண்டும். எனவே, உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்.
ஏற்கெனவே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, கர்நாடக அரசு காவிரியில் நமக்கு வழங்க வேண்டிய உரிய பங்கு நீரை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி கர்நாடக அரசு நடந்துகொள்ள வேண்டும். காவிரியில் நமக்குரிய பங்கு நீரைப் பெற வேண்டும் என்று த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Edappadi Palaniswami says all party leaders should convene a meeting on the Mekedatu issue