பிளஸ்-2 முடித்த மூன்று நண்பர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஆம்னி பஸ் மோதல் ...! 3 பேர் உயிரிழப்பு
Three friends who completed Plus 2 riding same motorcycle when they collided omni bus 3 people died
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பிரசன்னா (17), கோகுல் (17), யுவராஜ் (17) ஆகிய மூவரும் ஒரே பள்ளியில் கல்வி பயின்று வந்த நெருங்கிய நண்பர்கள் ஆவர். சமீபத்தில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுதி முடித்திருந்த இவர்கள், தேர்வு முடிந்த பின் சற்று சுதந்திரமான நேரத்தை கழிக்க ஒன்றாக வெளியே செல்ல திட்டமிட்டுள்ளனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சாத்தூர்-கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் உப்பத்தூர் விலக்கு பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்று கொண்டிருந்தனர். காட்டுப்பள்ளி வாசல் பகுதி அருகே சென்றபோது, எதிர்திசையில் கன்னியாகுமரியிலிருந்து வந்த ஆம்னி பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த திடீர் விபத்தின் தாக்கத்தில் மூவரும் சாலையில் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டனர். இதில் யுவராஜ் மற்றும் பிரசன்னா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என பரிதாபமான தகவல் வெளியாகியுள்ளது.
உயிருக்கு போராடிய நிலையில் இருந்த கோகுல் அப்பகுதி பொதுமக்களால் அவசரமாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கோர விபத்து தொடர்பாக ஆம்னி பேருந்தை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஆஸ்டின் (26) என்பவரை சாத்தூர் தாலுகா காவலர்கள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Three friends who completed Plus 2 riding same motorcycle when they collided omni bus 3 people died