திருப்பூர்: நிதி நிறுவன அதிபரை அடித்து கொன்ற கொடூரம்!
thiruppur business man murder
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே நிதி நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ஒருவரை மர்ம கும்பல் தாக்கி கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் அருகே உள்ள வரக்காளிபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (41), கிருஷ்ணமூர்த்தியின் மகன். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வட்டித் தொழிலும், வெள்ளக்கோவில் பகுதியில் நிலம் வாங்கி விற்பனை செய்வதும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சனிக்கிழமை இரவு பெங்களூரு செல்லும் பேருந்தை பிடிக்க ஈஸ்வரமூர்த்தி தனது தந்தையுடன் ஸ்கூட்டரில் புறப்பட்டார். வரக்காளிபாளையம் அருகே வள்ளியிரச்சல் சாலை பிரிவில் சென்றபோது, பின்னால் வந்த டாடா சுமோ வாகனம் அவர்களை மோதியது. அதில் இருந்த கும்பல் இருவரையும் சரமாரியாக தாக்கி தப்பிச் சென்றது.
தீவிர காயமடைந்த தந்தை, மகனை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியிலேயே ஈஸ்வரமூர்த்தி உயிரிழந்தார். அவரது தந்தை சிகிச்சையில் உள்ளார்.
நிலத் தகராறே இந்த தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தை சென்றடைந்த வெள்ளக்கோவில் போலீஸார், தாக்குதலில் பயன்படுத்திய வாகனத்தை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈஸ்வரமூர்த்தி கொலை, நிதி மற்றும் நில வர்த்தகங்களில் நிலவும் போட்டிகளுக்கிடையே நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க சிறப்பு குழு அமைத்து தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
thiruppur business man murder