போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்; மரத்தில் தூக்கிட்டு தற்கொலை..!
Sub inspector arrested in POCSO case and released on bail commits suicide by hanging himself
தருமபுரி அடுத்த வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்த 55 வயதான சகாதேவன். இவர் ஏரியூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 2023 ஆண்டு அங்குள்ள ஒரு குழந்தைக்கு இவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில், போலீசார் சகாதேவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சகாதேவன், மனவேதனையில் இருந்துள்ளார். குடும்பத்தினர் அவருக்கு பல முறை ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

சம்பவ தினமான நேற்று அவர் சென்னைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் தருமபுரி ரெயில் நிலையம் அருகேயுள்ள மாந்தோப்பு என்கிற இடத்தில், சகாதேவன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்த சகாதேவனை பார்த்த அப்பகுதியில் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து உடனடியாக தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மரத்தில் தூக்கில் பிணமாக கிடந்த சகாதேவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Sub inspector arrested in POCSO case and released on bail commits suicide by hanging himself