இயக்குநரை கடத்தி கடுமையாக தாக்கிய நடிகை ஐஸ்வர்யா உள்ளிட்ட 11 பேர் கைது: பெங்களூரு போலீஸார் விசாரணை..!
11 people including actress Aishwarya arrested for kidnapping and severely assaulting director
தமிழகத்தை சேர்ந்த இயக்குநர் அனிஷ் (35) கன்னடத்தில் 'ஜீவனத பாஷே' என்ற திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில், இந்த படத்தின் தயாரிப்பு செலவுக்காக ஆஷீர்வாத் என்ற நடிகரிடம் ரூ.6 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.
அத்துடன், இந்த கடனை திருப்பி செலுத்தாமல், படத்தையும் பாதியிலே நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பணம் கொடுத்த ஆஷீர்வாத் மற்றும் அதில் நடித்த புதுமுக நடிகர்கள் சிலருக்கும் அனிஷூக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலை தொடர்ந்து, கடந்த 09-ஆம் தேதி அனிஷ் ஐஸ்வர்யாவை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பெங்களூருவில் உள்ள தனது காரை விற்பனை செய்ய உதவுமாறு கேட்டுள்ளார். இதையடுத்து ஐஸ்வர்யா 22-ஆம் தேதி அனிஷை பெங்களூருவுக்கு வரவழைத்துள்ளார். அப்போது காரை வாங்க இந்திரா நகரில் நண்பர் ஒருவர் தயாராக இருப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

ஐஸ்வர்யாவை நம்பி அங்குள்ள ஒரு வீட்டுக்கு அனிஷ் சென்றுள்ளார். அப்போது அனிஷை ஒரு அறைக்குள் அடைத்து வைத்து ஆஷீர்வாத் உள்ளிட்டோர் கிரிக்கெட் மட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
அத்துடன், அவரிடம் இருந்து 22 கிராம் தங்க சங்கிலி, செல்போன், ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் பறித்துள்ளனர். அத்தோடு நிறுத்தாமல் அவரை பெங்களூரு மாநகருக்கு வெளியே அழைத்து சென்று, கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த அனிஷ் மயங்கிய நிலையில், அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, ஆசிர்வாத் , ஐஸ்வர்யா உள்ளிட்ட கும்பல் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில், ஆடுகோடி போலீஸார் 04 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன் பின்னர், அனிஷிடம் நடத்திய விசாரணை, செல்போன் அழைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் நடிகை ஐஸ்வர்யா, நடிகர் ஆஷீர்வாத் உட்பட 11 பேரை கைது செய்துள்ளனர். கைதான 11 பேரும் கன்னட திரையுலகில் நடிக்க முயற்சித்துவரும் புதுமுக நடிகர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
English Summary
11 people including actress Aishwarya arrested for kidnapping and severely assaulting director