'ஏஐ' அமைச்சரான டியெல்லாவுக்கு தனது முகத்தை முறைகேடாக பயன்படுத்தியதால் 1 மில்லியன் யூரோ இழப்பீடு கேட்கும் அல்பேனியாவின் பிரபல நடிகை..!
Albanian actress seeks compensation from AI minister Diella for misusing her face
அல்பேனியா நாட்டின் புகழ்பெற்ற நடிகையான அனிலா பிஷா, கடந்த 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அரசு இணையதளத்தில் உதவி சேவை வழங்குவதற்காக தனது முகம் மற்றும் குரலை பயன்படுத்த ஒப்பந்தம் செய்திருந்தார்.
குறித்த ஒப்பந்தம் 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்துள்ள நிலையில், செப்டம்பர் 2025-ஆம் ஆண்டில் அந்த நாட்டு பிரதமர் எடி ராமா, அனிலா பிஷாவின் டிஜிட்டல் உருவத்தை 'டியெல்லா' என்ற பெயரில் நாட்டின் பொது கொள்முதல் துறை 'ஏஐ' அமைச்சராக அறிவித்தார்.
உலகம் முழுவதும் இந்த ஏஐ அமைச்சர் பிரபலமானார். இந்நிலையில், தனது அனுமதியின்றி தனது உருவம் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதையும், அமைச்சரவை இணையதளத்தில் இடம்பெற்றிருப்பதையும் கண்டு அனிலா பிஷா அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து, இது தனது அடையாளத்தை திருடும் செயல் என குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், அரசின் எதிராக தனது சட்டப்போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளார். இந்த ஏஐ அமைச்சர் தொடர்பாக டிரானா நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
விசாரணையில், வழக்கு முடியும் வரை அந்த உருவத்தை பயன்படுத்த தடை விதிக்க முடியாது என நடிகையின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. தொடர்ந்து, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக சுமார் 1 மில்லியன் யூரோ அதாவது இந்திய மதிப்பில் 10.73 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவர் வழக்கு தொடர்ந்துள்ளதால் அல்பேனியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
Albanian actress seeks compensation from AI minister Diella for misusing her face