ஏஐ உச்சி மாநாட்டில் போராட்டம் நடத்தி தப்பியோடிய காங்கிரஸ் நிர்வாகிகள் கைது விவகாரம்; இமாச்சலில் 24 மணி நேரம் சிறைபிடிக்கப்பட்ட டெல்லி போலீசார்..!
Delhi policemen detained for 24 hours in Himachal in connection with the arrest of Congress functionaries
கடந்த 20-ஆம் தேதியன்று டெல்லி பாரத் மண்டபத்தில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் சட்டையின்றி (அரை நிர்வாணம்) பிரசாரம் செய்து பாதுகாப்பு விதிமுறைகளை மீறினர். அத்துடன், மத்திய அரசு மற்றும் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாசகங்கள் அடங்கிய சட்டைகளை அணிந்து அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சவுரப் சிங், அர்பாஸ் கான் மற்றும் சித்தார்த் அவதூத் ஆகிய 03 பேரை கைது செய்ய டெல்லி போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், அவர்கள் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள ரோஹ்ரு பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த அவர்களை பிடிக்க, டெல்லி போலீசார் சாதாரண உடையில் சென்றனர்.

அப்போது உள்ளூர் போலீசாருக்கு முன்னதாக தகவல் தெரிவிக்காமல் அவர்களை அழைத்துச் சென்றதால், ஆட்கடத்தல் நடப்பதாக விடுதி உரிமையாளர் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் இமாச்சல போலீசார் டெல்லி போலீசாரின் வாகனங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன் காரணமாக, சுமார் 20 டெல்லி போலீசார் 24 மணி நேரம் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அப்போது இரு மாநில போலீசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர், நள்ளிரவு 1.30 மணி அளவில் சிம்லா நீதிமன்றத்தில் அனுமதி பெற்று,நேற்று அவர்கள் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், 'அரசியல் சட்ட நடைமுறைகளை மீறி டெல்லி போலீசார் அத்துமீறியது துரதிர்ஷ்டவசமானது' என்று தெரிவித்துள்ளது. ஆனால், இமாச்சல அரசு குற்றவாளிகளை காப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
English Summary
Delhi policemen detained for 24 hours in Himachal in connection with the arrest of Congress functionaries