மனு தள்ளுபடி! ஏதோ ஒரு உள்நோக்கத்துடன்... தமிழக அரசுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்!
Thiruparankundram HC Madurai Bench TNGovt
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகைத் தீபம் ஏற்ற தனிநபர்களுக்கு அனுமதி அளித்து, மத்தியப் படையுடன் பாதுகாப்பு வழங்க நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகக் கோயில் செயல் அலுவலர் சார்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று (டிச. 4) இந்த வழக்கை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர்.
தமிழக அரசின் வாதம்
சட்ட விரோதம்: தனி நீதிபதியின் உத்தரவு சட்டவிரோதமானது என்றும், மதுரை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு மட்டுமே மத்தியப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், வேறு பணிகளுக்கு அவர்களை ஈடுபடுத்த உத்தரவிட நீதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும் தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாதிட்டார்.
மேலும், "தனி நீதிபதியின் உத்தரவால் மதப் பிரச்சினை ஏற்படும் நிலை உருவானது. நேற்று திருப்பரங்குன்றத்தில் பேரிகார்டுகள் உடைக்கப்பட்டு, காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சமூக நல்லிணக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது," என்றும் அரசுத் தரப்பு குறிப்பிட்டது.
மலையில் தீபம் ஏற்றுவது குறித்து ஏற்கனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கும்போது, தனி நீதிபதி புதிய உத்தரவைப் பிறப்பிக்க அதிகாரம் இல்லை என்றும் அரசுத் தரப்பு வாதிட்டது.
நீதிமன்றத்தின் கேள்விகள்
உத்தரவு நகல் கிடைத்த 13 மணி நேரத்துக்குப் பிறகே மேல்முறையீடு தாக்கல் செய்தது ஏன் என்று நீதிபதிகள் கோயில் தரப்புக்குக் கேள்வி எழுப்பினர்.
"ஒரு மதத்தின் நம்பிக்கையைத் தடுப்பது எப்படிச் சமூக நல்லிணக்கம் ஆகும்? மத நல்லிணக்கம் என்பது இரு தரப்பும் இணைந்து தங்களுக்கானவற்றைச் செய்துகொள்வதில் தான் உள்ளது," என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எப்போது? அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் உத்தரவு இன்றே பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்த நிலையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் தமிழக அரசு இந்த மேல்முறையீட்டு மனுவை ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தாக்கல் செய்துள்ளதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
Thiruparankundram HC Madurai Bench TNGovt