04வது நாளாக நீடிக்கும் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டம்..!
The LPG Tanker Lorry Owners Associations strike continues for the 4th day
கடந்த 09-ஆம் தேதி முதல் தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய 03 ஆயில் நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் டெண்டர் அறிவித்தது. அதில் பங்கேற்ற 3500 லாரிகளில் 700 வாகனங்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவில்லை. அதிலும், புதிய டெண்டரில் பங்கேற்றுள்ள அனைத்து வாகனங்களுக்கும் ஒர்க் ஆர்டர் அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குறித்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 03 நாட்களாக தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய 06 மாநிலங்களில் இருந்து சுமார் 05 ஆயிரம் காஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால், சமையல் எரிவாயு லோடு ஏற்றும் துறைமுகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தூத்துக்குடி, மங்களூரு துறைமுகங்களில் கப்பல்களில் கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு லோடு ஏற்றப்படாமல் நடுக்கடலில் கப்பல் நிற்கிறது.

இதன் காரணமாக, ஆயில் நிறுவனங்களுக்கு துறைமுக அதிகாரிகள் தினமும் ரூ.60 லட்சம் அபராதம் விதித்து வருவதாக கூறப்படுகிறது. அத்துடன், கொச்சி, மங்களூரு, பாலக்காடு, தூத்துக்குடி, சென்னை, அனந்தபூர், விசாகபட்டிணம் ஆகிய இடங்களில் உள்ள எண்ணை சுத்திரிப்பு நிலையங்களில் இருந்து கடந்த 04 நாட்களாக சமையல் எரிவாயுலோடு லாரிகளில் ஏற்றப்படவில்லை என தெரியவருகிறது. இதன் காரணமாக சுமார் பல ஆயிரம் டன் சமையல் எரிவாயு கப்பல்களில் தேக்கம் அடைந்துள்ளது.
இந்நிலையில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் காலவரையற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர 03 ஆயில் நிறுவனங்களின் செயல் இயக்குனர்கள் நேற்றைய தினம் காணொலி காட்சி மூலம் தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சுமார் 03 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, இன்று (12-ஆம் தேதி) மீண்டும் காணொலி காட்சி வாயிலாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இது குறித்து, தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுந்தர்ராஜன், செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கூறியுள்ளதாவது: 'தற்போது நடைமுறையில் உள்ள டெண்டரை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு செய்யவேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. அதற்கு அவர்கள் 06 மாதம் மட்டும் நீட்டிப்பு செய்வதாக கூறியுள்ளனர். இன்று 04-வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நடக்கிறது. இன்று மீண்டும் ஆயில் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது' என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
The LPG Tanker Lorry Owners Associations strike continues for the 4th day