ஆப்கன் -பாகிஸ்தான் இடையே கடும் மோதல்: 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி: எல்லையில் தொடரும் பதற்றம்..!
58 Pakistani soldiers killed in fierce clash between Afghanistan and Pakistan
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த ஆப்கான் தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்கள் பலியாகியுள்ளதோடு,30 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த மோதலால் இரு நாடுகள் இடையே எல்லை தாண்டிய தீவிரவாதம் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது .கடந்த சில வாரங்களில் தெஹ்ரீக்-இ-தலிபான் (டிடிபி) நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் பாகிஸ்தான் வீரர்கள் ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.
அதனுடன், கடந்த வாரம் கைபர் பக்துன்க்வா மாவட்டத்தில் டிடிபி தாக்குதலில் 02 அதிகாரிகள் உட்பட 11 ராணுவ வீரர்கள் பலியாயுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு காபூலில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில், நேற்று முன்தினம் பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. எல்லையில் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் பலியாகியதோடு, 30 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் தலைமை செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் தெரிவிக்கையில்,'பலுச்சிஸ்தானில் உள்ள அங்கூர் அட்டா, பஜாவூர், குர்ரம்,சித்ரல் ஆகிய இடங்களில் பாகிஸ்தான் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 58 வீரர்கள் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர். 20க்கும் மேற்பட்ட நிலைகள் அழிக்கப்பட்டன. மேலும்,ஏராளமான ஆயுதங்கள், ராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. தாக்குதலில் 09 ஆப்கன் வீரர்களும் கொல்லப்பட்டனர். கத்தார், சவுதியின் வேண்டுகோளையடுத்து தாக்குதல் நிறுத்தப்பட்டது' என்று குஊறியுள்ளார்.
இதனையடுத்து, ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கையில், 'பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறினால், எங்கள் ஆயுதப் படைகள் நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க முழுமையாகத் தயாராகவுள்ளன, மேலும் வலுவான பதிலடியை வழங்கும் என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறுகையில்; 'எல்லையில் உள்ள நிலைகள் மீது ஆப்கான் படைகள் எந்த வித காரணமுமின்றி தாக்குதலை நடத்தியுள்ளன.
பொதுமக்கள் மீது ஆப்கானிஸ்தான் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூடு சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறுவதாகும். பாகிஸ்தான் படைகள் உடனடியாக உரிய பதிலை அளித்துள்ளன. எந்தவித ஆத்திர மூட்டலையும் பொறுத்துக்கொள்ள முடியாது' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முட்டாகி,டெல்லியில் பேட்டியளித்தார். அப்போது பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்துவதற்கு, இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் நெருக்கமாகி வருவதுதான் காரணமா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், 'இந்த கேள்வியை பாகிஸ்தானிடம் கேளுங்கள். எங்களுக்கு பாகிஸ்தானுடன் எந்த வித பிரச்னையும் இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் எங்களுக்கு வேறு வழி எதுவும் இல்லை. கத்தார், சவுதி ஆகிய நாடுகள் மோதலை நிறுத்தும்படி கேட்டு கொண்டன. அதை நாங்கள் ஏற்று கொண்டோம். பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்து உள்ளன. ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தி உள்ளோம்.
இந்த பிராந்தியம் முழுவதும் அமைதியை கொண்டு வர முயற்சிக்கின்றோம்.யாருக்காவது அமைதி தேவை இல்லையென்றால், எல்லையை நாங்கள் பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த 10-ஆம் தேதி டெல்லியில் முட்டாகியின் ஊடக சந்திப்பில், பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது குறித்து எதிர்க்கட்சிகள் சர்ச்சையை ற்படுத்திய நிலையில் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சூழலில் பாகிஸ்தான் ராணுவம், 'ஆப்கானிஸ்தானுடன் நடந்த எல்லை மோதலில் 23 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும், 200க்கும் மேலான தலிபான்கள் மற்றும் அதன் தொடர்புடைய போராளிகள் கொல்லப்பட்ட்டுள்ளதாகவும் பயங்கரவாத முகாம்கள் அழைக்கப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மண்ணில் தீவிரவாத குழுக்கள் செயல்படுவதற்கு தலிபான்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து, பாகிஸ்தான் ராணுவ ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை கருதி ஆப்கனில் செயல்பட்டு வரும் ஆயுத குழுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தீவிரவாத இலக்குகளை தொடர்ந்து செயலிழக்கச் செய்வதன் மூலம் தனது மக்களைப் பாதுகாக்கும் உரிமையை பாகிஸ்தான் தொடர்ந்து பயன்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
58 Pakistani soldiers killed in fierce clash between Afghanistan and Pakistan