ஆபரேஷன் கோல்டன் ஸ்வீப்: மும்பை விமான நிலைய ஊழியர்கள் உதவியுடன் கடத்தப்பட்ட ரூ.12.5 கோடி தங்கம் பறிமுதல்; வெளிநாட்டினர் உள்பட 13 பேர் அதிரடி கைது..!
Smuggled gold seized with the help of Mumbai airport staff 13 people including foreigners arrested in action
மும்பை விமான நிலையத்தில் செயல்பட்டு வந்த சர்வதேச தங்கக் கடத்தல் கும்பலை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அதிரடியாக மடக்கிப் பிடித்துள்ளனர். மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், ‘ஆபரேஷன் கோல்டன் ஸ்வீப்’ என்ற பெயரில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். குறித்த நடவடிக்கையின் போது சுமார் 12 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10.5 கிலோகிராம் 24 காரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் ஆறு இலங்கையர்கள், இரண்டு வங்கதேசத்தினர், இரண்டு விமான நிலைய ஊழியர்கள், கடத்தலுக்கு உதவிய இரண்டு பேர் மற்றும் கடத்தல் கும்பலின் மூளையாகச் செயல்பட்ட ஒருவர் அடங்குவதாக கூறப்படுகிறது.

இந்தக் கடத்தல் கும்பல், துபாயில் இருந்து மற்ற சர்வதேச இடங்களுக்குச் செல்லும் பயணிகளை கடத்தல் குருவிகளாகப் பயன்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது, பயணிகளின் உடலில் மறைத்து எடுத்து வரப்படும் தங்கம், சர்வதேச புறப்பாடு பகுதியில் உள்ள சில ஊழல் ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
அதன் பின்னர், குறித்த ஊழியர்கள் தங்கத்தை விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு வந்து, மும்பை மற்றும் துபாயில் உள்ள கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளிகளிடம் ஒப்படைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில், குற்ற அமைப்புகளுக்கு உள்ளே உள்ள ஊழியர்களே உதவி செய்வது பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் உள்ள சர்வதேச தொடர்புகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Smuggled gold seized with the help of Mumbai airport staff 13 people including foreigners arrested in action