அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள்: குறைக்காவிட்டால் நடவடிக்கை பாயும்; அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை..!
Minister Sivashankar warns that action will be taken if omni buses that charge high fares do not reduce them
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனால் வெளியூர்களில் இருப்பவர்கள், சென்னையில் தங்கி படிப்பவர்கள், வேலைக்கு செல்லும் வெளி மாநிலத்தவர்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு சென்று வருவார்கள்.
பேருந்து, ரயில்கள், விமானங்களில் செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையொட்டி ஆம்னி பஸ்களில் நிர்ணயித்து உள்ள கூடுதல் கட்டணத்தை குறைக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ரயிலில் முன்பதிவு கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கிய நிலையில் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளது. அத்துடன், காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்ததால் முன்பதிவையும் நிறுத்தியுள்ளனர். அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்ட நிலையில், பலர் 'தட்கல்' டிக்கெட்டுகளுக்காக காத்திருக்கின்றனர்.

இதனால், ரயிலில் செல்ல முடியாதவர்கள், அரசு பேருந்து மூலம் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல TNSTC இணையதளம் மற்றும் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்ற நிலையில், அதிலும் முன்பதிவுகள் முடிவடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், அரியலூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக விடப்பட்ட டெண்டர் அடிப்படையில், கடந்த காலங்களை போலவே தீபாவளி பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளும் இயக்கப்படும். அது மட்டுமில்லாமல் மற்ற அரசு போக்குவரத்து கழகங்களான கும்பகோணம், மதுரை, கோயம்புத்தூர் மற்றும் சேலம் போக்குவரத்து கழகங்களும் டெண்டர் அடிப்படையில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அவர்களை அழைத்து பேசியதன் பேரில் அவர்கள் நிர்ணயித்திருந்த தொகையை விட குறைத்து பேருந்துகளை இயக்கினார்கள். கடந்த ஆயுத பூஜை விடுமுறை காலங்களில் ஒரு சில ஆம்னி பேருந்துகள் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக வந்த தகவலின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தகவல் வந்திருக்கிறது. இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், சங்கத்தின் நிர்வாகிகளுடன் பேசியிருக்கிறேன். அவர்களும் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு அறிவுரைகள் வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள். கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து நிறுவனங்கள் இருக்கின்ற சூழலில் 10 நபர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்கள். நாளைக்குள் (இன்று) அவர்கள் அந்த கட்டணத்தை குறைக்காவிட்டால் தீபாவளிக்கு முன்பாகவே உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.'என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Sivashankar warns that action will be taken if omni buses that charge high fares do not reduce them