மடப்புரம் அஜித்குமார் காவல் மரண வழக்கு; கைது நடவடிக்கையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம்..!
The High Court has ordered a stay on the arrest proceedings in the Madapuram Ajith Kumar custodial death case
மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 04 பேரை கைது செய்வது தொடர்பான நடவடிக்கையை மார்ச் 12 வரை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஜித்குமார் காவல் மரண வழக்கில் திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் 08-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி எல்.விக்டோரியா கெளரி விசாரித்த போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி வாதிட்டார். அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கில் தனிப்படை காவலர்கள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் சிபிஐ விசாரணை நடத்தி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் டிஎஸ்பி, மனுதாரர் உட்பட 04 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

அத்துடன், மனுதாரருக்கு விசாரணை நீதிமன்றம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. அதன் அடிப்படையில் மனுதாரர் பிப்ரவரி 25-இல் நீதிமன்றத்தில் ஆஜராகி, ஜாமீன் பத்திரங்களையும் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட மனுதாரர் உட்பட 04 பேரை விசாரணை முடியும் வரை சிறையில் அடைக்க வேண்டும் என நீதித்துறை நடுவர் கூறியுள்ளார். இதனால் மனுதாரர் கைது செய்யப்படலாம் என அச்சப்படுகிறார். அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறினார்.

அப்போது சிபிஐ தரப்பில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதோடு, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி, முன்ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ தரப்பில் மார்ச் 12-இல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதுவரை இந்த விவகாரத்தை தலைமை குற்றவியல் நடுவர் நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் அஜித்குமார் வழக்கு விசாரணை நீதித்துறை நடுவர் செல்வபாண்டி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரம், காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் தலைமைக் காவலர் இளையராஜா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரணையின் பின்னர் வழக்கு மார்ச் 16-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
English Summary
The High Court has ordered a stay on the arrest proceedings in the Madapuram Ajith Kumar custodial death case