மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசல்ட்டா வழக்கு: டி.என்.ஏ பரிசோதனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Madhampatti Rangaraj Joy Crisalta case Madras High Court orders DNA testing
நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகவும், தனது ஆண் குழந்தைக்கு அவர் தான் தந்தை என்றும் ஜாய் கிரிசல்ட்டா தெரிவித்த விவகாரம் கடந்த சில மாதங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வழக்கில் முக்கிய முன்னேற்றமாக சென்னை உயர்நீதிமன்றம் மரபணு (DNA) பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது. இதற்காக வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, இரு தரப்பினரும் டி.என்.ஏ சோதனை செய்து அதன் முடிவுகளை மத்தியஸ்தரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் ஜாய் கிரிசல்ட்டா தரப்பும், மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பும் மரபணு பரிசோதனை நடத்த கோரிக்கை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜாய் கிரிசல்ட்டா கடந்த ஆண்டு மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், தன்னை திருமணம் செய்து கொண்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாகவும், தனது கர்ப்பத்தில் இருந்த குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், தங்களது திருமணம் குறித்து அவரது முதல் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் தெரியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையும் இரு தரப்பினரையும் விசாரித்தது. இதற்கிடையில் ஜாய் கிரிசல்ட்டா சமூக வலைதளங்களில் மாதம்பட்டி ரங்கராஜுடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்து வந்தார். இதனால் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது.
முதலில் அந்த குழந்தைக்கு தன்னுடன் தொடர்பு இல்லை என்று மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ், ஒருவேளை அந்த குழந்தைக்கு தானே தந்தை என நிரூபிக்கப்பட்டால் அதன் பராமரிப்பு செலவுகளை ஏற்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது மரபணு பரிசோதனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இந்த வழக்கில் உண்மை நிலை விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Madhampatti Rangaraj Joy Crisalta case Madras High Court orders DNA testing