முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்திற்கு வயது தளர்வு - தமிழக அரசு அறிவிப்பு!
Thayumanavar Scheme TN Govt MK Stalin
முதியோரும் மாற்றுத்திறனாளிகளும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் ரேஷன் பொருட்களைப் பெறும் வகையில், ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டம் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி தண்டையார்பேட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்டது.
இந்த திட்டம், தமிழ்நாடு அரசு வழங்கும் நலத்திட்ட சேவைகளை மக்களின் வாசல் வாசலாக கொண்டு செல்லும் முக்கிய முயற்சியாகும். இதன் மூலம், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை தங்களது வீடுகளிலேயே பெறுகின்றனர்.
முழு மாநில அளவில் 34,809 நியாயவிலைக் கடைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள 15,81,364 ரேஷன் அட்டைகளின் கீழ் உள்ள 20,42,657 முதியோரும், 91,969 ரேஷன் அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்திறனாளிகளும் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக சிறப்பு வாகனங்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அதிகமான முதியோர் தங்களது வயது காரணமாக தகுதி பெற முடியாமல் இருப்பதை கருத்தில் கொண்டு, அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே வழங்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தின் வயது வரம்பு 70 இலிருந்து 65 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், கூடுதல் ஆயிரக்கணக்கான முதியோர் இனிமேல் வீட்டிலிருந்தே ரேஷன் பொருட்களை பெற முடியும். பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கத்துடன், அரசு இந்த திட்டத்தை மேலும் பல மாவட்டங்களில் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Thayumanavar Scheme TN Govt MK Stalin