12 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்ட மோப்ப நாய்.!
thanjavur sniffer dog sachin died
சிறு துரும்பையும் துருப்புச் சீட்டாக மாற்றும் அளவுக்கு நுட்பமான புலனாய்வு மூலம் கொலை, கொள்ளை வழக்குகளில் போலீஸார் துப்பு துலக்கி வருகின்றனர். அவர்களுடைய இந்த இக்கட்டான சூழலைச் சமாளிப்பதற்காக தடய அறிவியல் பிரிவு, கைரேகை பிரிவு உள்ளிட்டவை பெரிதும் உதவுகின்றன.
இருப்பினும், போலீஸாருக்குப் பெரும் துணையாக உள்ளது இந்த துப்பறியும் நாய் படை பிரிவு. பொதுமக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் போலீஸாருக்கு இந்த மோப்ப நாய்கள் உற்ற துணையாக உள்ளன. அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வெடிகுண்டு கண்டறிதலில் நன்கு பயிற்சி பெற்ற சச்சின் என்ற மோப்பநாய் துப்பறிவு பணியில் ஈடுபட்டு வந்தது.
இந்த மோப்ப நாய்க்கு வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த நாய் மோப்ப நாய் பிரிவில் சக நாய்களுடன் இருந்து வந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தது.
இதையடுத்து இறந்த மோப்பநாய் சச்சினின் உடல் தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தில் உள்ள மோப்பநாய் பிரிவு அலுவலக வளாகத்திற்குள் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட காவல் எஸ்.பி ஆஷிஷ் ராவத் நேரில் வந்து மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மோப்ப நாய் சச்சின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது 12 துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டது. மேலும், மோப்பநாய் சச்சின் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்களும் அதற்குப் படைக்கப்பட்டன.
English Summary
thanjavur sniffer dog sachin died