விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பயங்கரம்...! பேருந்து ஓட்டுநர் பலி...6 பேர் பிடிபட்டு தீவிர விசாரணை...!
Terror Ganesha Chaturthi procession Bus driver killed 6 people arrested and intensive investigation
சென்னை ராமாபுரத்தில் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்தின்போது ஏற்பட்ட தகராறில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேரை பிடித்து காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ராஜ்பந்தமதி விநாயகர் ஆலயத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி மாலையில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.ஊர்வலம் குறிப்பிட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இருதரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

நேரம் செல்லச் செல்ல வாக்குவாதம் முற்றி, இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த மோதலில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநரான சீனிவாசன் என்பவர் சரமாரியாக தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமாபுரம் காவலர்கள், கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமாக, இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவலர்கள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
மோதலுக்கான காரணம், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதலில் அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் ராமாபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Terror Ganesha Chaturthi procession Bus driver killed 6 people arrested and intensive investigation