அண்ணாவின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்துவோம்...! - முதலமைச்சர் விஜய் தவெக சார்பில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி...!
Let us carry Anna principles our hearts congratulatory message issued on behalf of Chief Minister Vijay tvk
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சரும், பேரறிஞருமான அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் அண்ணாவின் அரசியல் பணிகளையும், மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளையும் நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பாதையை உருவாக்கியதுடன், ஏழை, எளிய மக்களின் உரிமைகளுக்காக வலிமையான குரல் எழுப்பியவர் பேரறிஞர் அண்ணா.

அவரது பிறந்தநாளில், மக்கள் நலனை முன்னிறுத்திய அவரது தொலைநோக்குப் பார்வையையும், அர்ப்பணிப்புமிக்க மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.உரத்த மேடைப் பேச்சுகளாலும், ஆற்றல்மிக்க எழுத்துகளாலும் மக்களின் உள்ளங்களை வென்ற அண்ணா, அவர்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார்.
தமிழ் மொழி மீது கொண்ட ஆழ்ந்த பற்றின் வெளிப்பாடாக நமது மாநிலத்துக்கு “தமிழ்நாடு” என்ற பெயரை சூட்டினார்.மாநில உரிமைகளுக்கு வலுவான அடித்தளம் அமைத்ததுடன், சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய பெருமையும் அண்ணாவையே சேரும்.
சமூகநீதி, சமத்துவம் உள்ளிட்ட கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் அவர் தனக்கென அழியாத இடத்தைப் பெற்றார்.
அண்ணா வலியுறுத்திய “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு”, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” போன்ற உயரிய முழக்கங்களை இன்றைய தலைமுறையும் மனதில் பதியச் செய்ய வேண்டும்.
சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை அனைத்து தரப்பினரிடையேயும் வேரூன்றி வளரவும், தமிழ் மொழியின் பெருமையையும் உரிமைகளையும் பாதுகாக்கவும் அண்ணாவின் பிறந்தநாளில் அனைவரும் உறுதியேற்போம்.இவ்வாறு முதலமைச்சர் விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Let us carry Anna principles our hearts congratulatory message issued on behalf of Chief Minister Vijay tvk