சினிமாவை தாண்டி பிசினஸில் கலக்கும் விஜய் தேவரகொண்டா! புதிய பியூட்டி, ஸ்கின்கேர் பிராண்ட் தொடக்கம்.. என்ன ஸ்பெஷல்?
Beyond cinema Vijay Deverakonda is making waves in business Launching a new beauty and skincare brand what makes it special
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா, சினிமாவைத் தாண்டி பிசினஸ் துறையிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே ‘ரவுடி’ (RWDY) என்ற பெயரில் ஆடை பிராண்டை நடத்தி வரும் அவர், தற்போது புதிதாக பியூட்டி மற்றும் ஸ்கின்கேர் துறையிலும் களமிறங்கியுள்ளார்.
விஜய் தேவரகொண்டா ‘ரவுடி’ என்ற ஆடை பிராண்டை வெற்றிகரமாக நடத்தி வருவதுடன், மகபூப்நகரில் ‘ஏசியன் விஜய் தேவரகொண்டா’ (AVD) சினிமாஸ் என்ற பெயரில் மல்டிபிளக்ஸ் திரையரங்கையும் தொடங்கியுள்ளார். இதுதவிர, ஹைதராபாத்தின் மேட்சல் அல்லது மல்காஜ்கிரி பகுதிகளில் மேலும் ஒரு மல்டிபிளக்ஸ் கட்டும் திட்டத்திலும் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘அன்ஹைப்’ (Unhype) என்ற புதிய பியூட்டி மற்றும் ஸ்கின்கேர் பிராண்டில் இணை நிறுவனர் மற்றும் பார்ட்னராக விஜய் தேவரகொண்டா இணைந்துள்ளார். இதன் மூலம் சினிமா, ஆடை, திரையரங்கம் என தொடர்ந்து பல்வேறு துறைகளில் தனது பிசினஸ் முயற்சிகளை அவர் விரிவுபடுத்தி வருகிறார்.
வெறும் விளம்பரம் இல்லை.. R&D-யிலும் பங்கு!
இந்த புதிய பிராண்டில் வெறும் பிராண்ட் அம்பாசிடராக மட்டும் இருக்காமல், தயாரிப்புகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளிலும் விஜய் தேவரகொண்டா முக்கிய பங்காற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் தட்பவெப்பநிலையை கருத்தில் கொண்டு தயாரிப்புகளை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அதிகப்படியான வெயில், ஈரப்பதம், காற்று மாசுபாடு மற்றும் கடின நீர் போன்றவற்றால் ஏற்படும் சருமப் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த ஸ்கின்கேர் பொருட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சந்தையில் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, சுமார் ஒன்பது மாதங்கள் அவற்றை தானே பயன்படுத்தி சோதித்துப் பார்த்ததாக விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். இதன் மூலம் தயாரிப்புகளின் செயல்திறன் குறித்து நேரடியாக தெரிந்துகொண்டு, அதன் பின்னரே சந்தைக்கு கொண்டு வந்ததாக அவர் கூறியுள்ளார்.
18 முதல் 30 வயதினர்தான் டார்கெட்!
‘Unhype’ பிராண்ட் முக்கியமாக 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலினத்தினரும் பயன்படுத்தும் வகையில் இது யுனிசெக்ஸ் பிராண்டாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, ‘ஆக்னே சேஃப் ரொட்டீன்’ மற்றும் ‘பிரைட்டனிங் ரொட்டீன்’ என்ற பெயர்களில் இரண்டு காம்போ பேக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த காம்போக்களில் ஃபேஸ் வாஷ், மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
விஜய் தேவரகொண்டாவின் புதிய ஸ்கின்கேர் பிராண்டின் தயாரிப்புகள் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ப்ரீ-புக்கிங்கும் ஏற்கனவே தொடங்கியுள்ளது.
சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பதுடன், ஆடை மற்றும் திரையரங்க தொழில்களில் கால்பதித்துள்ள விஜய் தேவரகொண்டா, தற்போது பியூட்டி மற்றும் ஸ்கின்கேர் துறையிலும் தனது பயணத்தை தொடங்கியிருப்பது ரசிகர்கள் மற்றும் பிசினஸ் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
English Summary
Beyond cinema Vijay Deverakonda is making waves in business Launching a new beauty and skincare brand what makes it special