ஆசிரியர் பணியிடமாற்றம்... காலியாக கிடக்கும் பணியிடம்...! அரசு பள்ளியில் மாணவர்களின் கல்வி பாதிப்பா...?
Teacher transfer Vacant position Will it affect education students government schools
சென்னை பல்லாவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவி திருவல்லிக்கேணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக புதிய ஆசிரியர் இதுவரை நியமிக்கப்படாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, எமிஸ் தளம் மூலம் ஆண்டுதோறும் பொதுப் பணியிடமாற்ற கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பணியிடமாற்ற கலந்தாய்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற இருந்தது.
ஆனால், நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக ஆசிரியர்களுக்கான பொதுப் பணியிடமாற்ற கலந்தாய்வு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், சென்னை அருகே உள்ள பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணியாற்றிய அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவிக்கு மட்டும், திருவல்லிக்கேணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுப்பணி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பொதுப் பணியிடமாற்ற கலந்தாய்வு நடைபெறாத சூழலில் இந்த மாற்றுப்பணி வழங்கப்பட்டது ஆசிரியர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் வசிக்கும் இடத்திற்கு அருகில் பணியாற்றும் வகையில் இந்த மாற்றம் வழங்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே, அந்த ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் கடந்தும், மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அவருக்குப் பதிலாக புதிய ஆசிரியர் நியமிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஏற்கனவே குறைந்த ஆசிரியர் எண்ணிக்கையுடன் செயல்பட்டு வரும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது,"மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. அதற்கேற்ப ஆசிரியர் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.
ஏற்கனவே ஆசிரியர்கள் கூடுதல் பணிச்சுமையுடன் செயல்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில், அறிவியல் ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பிறகும், அவருக்குப் பதிலாக புதிய ஆசிரியர் நியமிக்கப்படாமல் இருப்பது சிரமத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இரண்டு மாதங்களாக காலியாக உள்ள அந்தப் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும். இல்லையெனில் மாணவர்களின் கல்வி மற்றும் கற்றல் நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படும்.இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
English Summary
Teacher transfer Vacant position Will it affect education students government schools