இனி பவர் கேட் இருக்காது... மின் தேவையைச் சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: தமிழ்நாடு அரசு நடவடிக்கை!
tb govt announce power cut issue
தமிழ்நாட்டில் நீடித்த கோடை வெப்பத்தின் காரணமாக அதிகரித்து வரும் மின் தேவையைச் சமாளிக்கவும், சீரான மின்விநியோகத்தை உறுதி செய்யவும் தமிழ்நாடு மின்சார வாரியம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மின் தேவை அதிகரிப்புக்கான காரணம்: இந்த ஆண்டு கோடைக்காலம் எதிர்பாராத வகையில் நீடித்ததால் மின்சாரத் தேவையும் அதிகரித்தது. அதேவேளையில், காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தியும் எதிர்பார்த்த அளவிற்குக் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டதால் சில நேரங்களில் மின்னழுத்தக் குறைபாடு போன்ற தொழில்நுட்பப் பிரச்னைகள் உருவாயின.
கூடுதல் மின் கொள்முதல்: இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிச்சந்தையில் இருந்து கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தற்போது மின் தொகுப்பின் நிலைமை சீராகவும் நம்பகத்தன்மையுடனும் உள்ளது.
உயர்மட்டக் கண்காணிப்பு: மின் கட்டமைப்பு மாறுபாடுகள் மற்றும் மின் விநியோக நிலைமையை மின்வாரிய தலைமையகத்தில் உள்ள உயர்மட்ட அலுவலர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து, உடனுக்குடன் உரிய உத்தரவுகளை வழங்கி வருகிறது.
சிறப்புக் குழுக்கள் அமைப்பு: மின்விநியோகப் பாதிப்புகளை உடனடியாகச் சரிசெய்யத் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்விநியோகம் சீரமைக்கப்பட்டு வருகிறது.
களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்: மின்தடை ஏற்படும் நிகழ்வுகளை எந்தவித அலட்சியமும் இன்றி உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என களப்பணியில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காகத் திட்டமிடப்பட்ட மின்தடைகளை இயன்றவரை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுகர்வோர் சேவை மையம்: பொதுமக்களுக்கு நாள் முழுவதும், குறிப்பாக இரவு நேரங்களிலும் சீரான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய மின்வாரியம் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மின்சாரத்துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணி நேரமும் இயங்கும் நுகர்வோர் சேவை மையமான 'மின்னகத்தை' 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
English Summary
tb govt announce power cut issue