பெரம்பலூரில் பரபரப்பு.. ரூ.5 கூடுதலாக கேட்ட டாஸ்மாக் ஊழியர்.! பாட்டிலால் மண்டையை உடைத்த மதுப்பிரியர்கள்..!!
Tasmac employee assaulted after asking Rs5 extra
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அரசு அனுமதி பெற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் கோட்டருக்கு 10 ரூபாயும், ஆபுக்கு 20 ரூபாயும், புல்லுக்கு 40 ரூபாயும் கூடுதலாக பணம் வாங்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேள்வி எழுப்பியதற்கு தமிழக முழுவதும் உள்ள 5000 கடைகளுக்கும் சென்று நீங்கள் மதுபானம் வாங்கினீர்களா.? என கேள்வி எழுப்பிய செய்தியாளர்களின் வாய் அடைப்பார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இத்தகைய பேச்சுக்கு பிறகு சமூக வலைதளமான ட்விட்டரில் ஆதாரங்களுடன் பல வீடியோக்கள் மற்றும் டாஸ்மாக் கடையில் வழங்கப்படும் ரசீதுகள் #பத்துரூபாய்_பாலாஜி ஹேஷ்டேக்கில் பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் ஒரு மதுபான கடை விற்பனையாளர் தனது ஆதங்கத்தை வெளிப்படையாகவே கொட்டி தீர்த்த வீடியோவும் நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் ஒரு பெட்டி இறக்கினால் 5 ரூபாய் கமிஷன் தர வேண்டும், பாட்டில் உடைந்தால் நாங்கள் தான் பொறுப்பு என ஆதங்கத்துடன் வெளிப்படையாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக்கில் விற்பனையாளராக பணிபுரியும் நடராஜன் என்பவர் மதுபானம் வாங்க வந்த நபர்களிடம் 5 ரூபாய் கூடுதலாக கேட்டுள்ளார். இதனால் டாஸ்மாக் கடை விற்பனையாளர் நடராஜனுக்கும் மது வாங்க வந்த 3 மதுப் பிரியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி மதுப்பிரியர்கள் நடராஜன் தலையில் மதுபாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த நடராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Tasmac employee assaulted after asking Rs5 extra