மனமகிழ் மன்றங்களில் சட்டவிரோத மது விற்பனை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
TASMAC Chennai HC
மனமகிழ் மன்றங்களில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக வந்த புகார் தொடர்பான வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த மனுவில், “மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் எப்எல்-2 உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுகின்றன.
ஆனால் இவை சட்டப்படி காலவரையறைக்குள் செயல்படாமல் அதிகாலை வரை திறந்திருப்பதுடன், உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் மதுவிற்பனை நடைபெறுகிறது.
மது விற்பனைக்கு ரசீதும் வழங்கப்படுவதில்லை. போலீஸார் லஞ்சம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர்” என குற்றம்சாட்டினார்.
மேலும், தமிழகத்தில் உள்ள 125 எப்எல்-2 உரிமம் பெற்ற மதுபான கூடங்களில் உண்மையில் இன்னும் அதிகமாக செயல் பட்டு வருகின்றன என்றும், அவற்றின் செயல்பாடுகள் மீது தணிக்கை தேவை எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் ஏ.டி.மரிய கிளாட், “சட்டவிரோத மது விற்பனை ஒரு குற்றம். ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு விட முடியாது. இதற்கான பொறுப்பு அதிகாரிகளின் மேலே உள்ளது. அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினர்.
தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள எப்எல்-2 மதுபான கூடங்களில் சட்டவிரோத விற்பனையை தடுக்கும் வகையில், மாவட்ட மதுவிலக்கு உதவி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.