இந்தியாவில் வெப்பம் மற்றும் புழுக்கத்தில் டாப் இடத்தில் தமிழகம்; ஆய்வறிக்கை எச்சரிக்கை..!
Tamil Nadu ranks among the top two states in India for heat and humidity
சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில், வெப்பநிலை மிக அதிகமாக இல்லாத நாட்களில்கூட, காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம் காரணமாகக் கடுமையான புழுக்கமும் உடல் சோர்வும் ஏற்படுவதாக கிளைமேட் ட்ரெண்ட்ஸ் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2015-24 காலத்தில் இந்தியாவில் புழுக்கமான நாட்கள் கடுமையாக அதிகரித்துள்ளதை கிளைமேட் ட்ரெண்ட்ஸ் ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது.
இந்த ஆய்வறிக்கையின்படி, கடந்த 2015 முதல் 2024 வரையிலான பத்து ஆண்டுகளில் இந்த ஆபத்தான காலநிலை மாற்றம் தீவிரமடைந்துள்ளது. இப்பட்டியலில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அடுத்து, இந்திய அளவில் முந்தைய ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, கடந்த 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இத்தகைய புழுக்கமான நாட்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, 2024-இல் உச்சத்தை எட்டியுள்ளது.

சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில், வெப்பநிலை மிக அதிகமாக இல்லாத நாட்களில்கூட, காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம் காரணமாகக் கடுமையான புழுக்கமும் உடல் சோர்வும் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதன் நேரடி விளைவாக, இரவு நேரங்களிலும் மக்கள் மின்விசிறிகளில் இருந்து ஏசிக்கு மாறும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை கடந்த பத்து ஆண்டுகளில் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால், கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 12 ஆயிரத்து 969 மெகாவாட்டாக இருந்த மின்சாரத் தேவை, நடப்பு 2025-26 காலகட்டத்தில் 20 ஆயிரத்து 148 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சென்னை போன்ற இடங்களில் நகரமயமாக்கல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் நகரங்கள் பெரும் வெப்பப் பொறிகளாக மாறி வருகின்றன. வரும் இரண்டாயிரத்து 30க்குள் இந்தியாவில் 40 சதவீத வீடுகளில் ஏசி பயன்பாடு வந்துவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போதைய நிலையில், தமிழ்நாட்டின் மின்னுற்பத்தியில் நிலக்கரி இன்னும் முதலிடத்தில் இருந்தாலும், சுமார் 38 சதவீத மின்சாரம் காற்று மற்றும் சூரிய ஒளி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பெறப்படுவது சற்றே ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். இந்த நகர்ப்புற வெப்ப அழுத்தத்தைக் குறைக்க, கட்டடங்களின் கூரைகளில் வெப்பப் பிரதிபலிப்பு பூச்சுகளைப் பயன்படுத்துதல் மற்றும் பசுமை உள்கட்டமைப்புகளை அதிகரிப்பது அவசியம் எனவும் கிளைமேட் ட்ரெண்ட்ஸ் ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.
English Summary
Tamil Nadu ranks among the top two states in India for heat and humidity