மோசடி அம்பலம்...! போலி பழங்குடியினர் சாதி சான்றிதழ்களை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு...!
Tamil Nadu government orders action to cancel fake tribal caste certificates
பழங்குடியினர் சலுகைகளைப் பெறுவதற்காக போலியான சாதிச் சான்றிதழ்கள் பெறப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த 2018-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட பழங்குடியினர் சாதிச் சான்றிதழ்களை ஆய்வு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பழங்குடியினர் சமூகத்தினருக்கு அரசு பல்வேறு சலுகைகளையும் இடஒதுக்கீட்டு வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. இந்தச் சலுகைகளைப் பெறும் நோக்கில், தகுதி இல்லாத சிலர் முறைகேடாக பழங்குடியினர் சாதிச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதாக தமிழக அரசின் கவனத்திற்கு தகவல்கள் வந்துள்ளன.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சமூகநீதித்துறை செயலாளர் சுப்பையன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்ததாவது,"தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலில் இடம்பெற்றுள்ள காணிக்காரன், காணிக்கர் சமூகத்தினர் கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளிலும் மட்டுமே வசித்து வருகின்றனர். எனவே, அந்தப் பகுதிகளில் வசிக்கும் தகுதியான நபர்களுக்கு மட்டுமே பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், 1.1.2018 முதல் 26.5.2026 வரையிலான காலகட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், மதுரை, ராமநாதபுரம், திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 954 பேருக்கு காணிக்காரன், காணிக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனால், காணிக்காரன், காணிக்கர் சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளுக்கு வெளியே உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு எந்த அடிப்படையில் இந்தச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என்பது குறித்து மாவட்ட கலெக்டர்கள் விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
இந்த விசாரணையில் முறைகேடாக சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், அவற்றை உடனடியாக ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழுமையான விவரங்களை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்" என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamil Nadu government orders action to cancel fake tribal caste certificates