விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கைது விவகாரம்...! 'வீட்டுக்காவலை நீக்கி உடனே விடுதலை செய்ய வேண்டும்' - வேல்முருகன் கோரிக்கை
Farmers Association leader Ayyakkannu arrest issue House arrest lifted and he released immediately Velmurugan demands
விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், அந்த நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது,"விவசாயிகளின் நலனுக்காக சட்டப்பூர்வமான மற்றும் சனநாயக வழிகளில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை வீட்டுக்காவலில் வைத்து அவரது போராட்டக் குரலை முடக்க முயற்சிப்பது சனநாயக மாண்புக்கு எதிரான செயலாகும்.

கருத்துகளை எதிர்கொள்ள முடியாத ஆட்சிகளே அடக்குமுறையைத் தங்களின் ஆயுதமாகப் பயன்படுத்தும்.தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும் மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் கர்நாடக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இத்தகைய சூழலில், தமிழக விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி போராட்டத்தை அறிவித்த விவசாய சங்கத் தலைவரை வீட்டுக்காவலில் வைப்பது தமிழக அரசின் தவறான அணுகுமுறையாகும்.விவசாயிகளின் உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியில் போராடும் ஒருவரைத் தடுப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனவே, அய்யாக்கண்ணு மீதான வீட்டுக்காவல் நடவடிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.வீட்டுக்காவல் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் சனநாயக உரிமைகளை மதிப்பதுடன், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசிடம் தமிழக அரசு உறுதியுடன் முன்வைக்க வேண்டும்" என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
English Summary
Farmers Association leader Ayyakkannu arrest issue House arrest lifted and he released immediately Velmurugan demands