தற்கொலையா...? திட்டமிட்ட கொலையா? காவலர் வீட்டில் கண்ணீர் சம்பவம்! -எஸ்.ஐ. மனைவி தூக்கில் சாவு
Suicide planned murder tragic incident police officers home SI wife found dead by hanging
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பணியாற்றி வந்த டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் (31) – அவரது மனைவி இளவரசி (26) வாழ்க்கை திடீரென அதிர்ச்சி திருப்பத்தை சந்தித்துள்ளது. காதலித்து, இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சாத்தூர் என்.ஜி.ஓ. காலனியில் குடும்பமாக வசித்து வந்தனர்.

சம்பவத்தன்று பணியை முடித்து வீடு திரும்பிய அருண்குமாருக்கு, கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாததால், அவர் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது ஒரு அறையில் இளவரசி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அருகிலுள்ள மற்றொரு அறையில், 2 வயது குழந்தை கைபேசியுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.இந்த தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி, இளவரசியின் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். விசாரணையில், இளவரசியின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸில் “நான் செல்கிறேன்… குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்… நன்றாக படிக்க வையுங்கள்” என்ற உருக்கமான பதிவு இருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து சந்தேகம் எழுப்பிய இளவரசியின் உறவினர்கள், நேற்று அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். “இது தற்கொலை அல்ல; கொலை செய்து தூக்கிலிட்டிருக்கலாம். இளவரசி சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். உடனடியாக வழக்குப்பதிவு செய்து எஸ்.ஐ. அருண்குமாரை கைது செய்ய வேண்டும்” என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கலைத்தனர். போலீஸ் தரப்பில் கூறுகையில், “இளவரசியின் தந்தை கருப்பசாமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அருண்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும்” என தெரிவித்தனர்.மேலும் அந்த புகாரில், அருண்குமாருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், புதிய கார் வாங்க பணம் கொண்டு வரச் சொல்லி இளவரசியை மனதளவில் துன்புறுத்தியதாகவும், இதன் விளைவாகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான வழக்கு சாத்தூர் மட்டுமல்ல, காவல் துறையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Suicide planned murder tragic incident police officers home SI wife found dead by hanging