மாணவர் கொலை எதிரொலி: 13 ரெஸ்டோ பார்களுக்கு சீல்!
Student murder fallout Seal on 13 restaurants
ரெஸ்டோ பார் கொலை எதிரொலியாக, புதுச்சேரியில் நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களுக்கு கலால்துறை சீல் வைத்ததுடன், அதன் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் கல்லூரி மாணவன் மோஷிக் சண்முகபிரியன் . 22 வயதான இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் கல்லூரியில் படிக்கும் நண்பரான மதுரை மேலூரை சேர்ந்த ஷாஜன் என்பவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக 18-க்கும் மேற்பட்டோருடன் கடந்த 9-ந்தேதி நள்ளிரவு புதுவைக்கு சென்றுள்ளனர் .
அப்போது அவர்கள் மிஷன் வீதியில் உள்ள ஓ.எம்.ஜி. ‘ரெஸ்டோ’ பாருக்கு சென்று பிறந்தநாளை கொண்டாடினர்.மதுபோதையில் கொண்டாட்டம் அதிகாலை வரை நீடித்ததால் மாணவர்களை பவுன்சர்கள் வெளியேறும்படி கூறிய போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரெஸ்டோ பார் ஊழியர்கள் கத்தியால் குத்தியதில் மோஷிக் சண்முகபிரியன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சக மாணவன் ஷாஜனுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்தநிலையில் ரெஸ்டோ பார் ஊழியர் வில்லியனூரை சேர்ந்த அசோக்ராஜ், ரெஸ்டோ பார் உரிமையாளர் முத்தியால்பேட்டை ராஜ்குமார் , கேசியர் முத்தியால்பேட்டை சஞ்சய்குமார், ஊழியர்கள் பூபதி என்ற டேவிட், கடலூரை சேர்ந்த அரவிந்த் , விழுப்புரத்தை சேர்ந்த பவுன்சர் புகழேந்தி ஆகிய 6 பேரை போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்தனர்.
நேற்று இரவு அவர்கள் 6 பேரும் புதுவை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ரெஸ்டோ பார் கொலை எதிரொலியாக, புதுச்சேரியில் நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களுக்கு கலால்துறை சீல் வைத்ததுடன், அதன் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
English Summary
Student murder fallout Seal on 13 restaurants