தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம் - தமிழக அரசு உத்தரவு.!
special patta camp in tamilnadu
தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம் - தமிழக அரசு உத்தரவு.!
தமிழகத்தின் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மிக பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஓராண்டில் நூறு இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலா் குமாா் ஜயந்த் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், "தமிழகத்தின் முன்னாள் முதல்வரான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் வீட்டுமனைப் பட்டாக்கள், பட்டா மாறுதல் உத்தரவுகள் பெறத் தகுதியான பயனாளிகளுக்கு பட்டாக்கள் அளிக்கப்படும். பட்டா மாற்றம் தொடா்பான மனுக்கள் பெறப்பட்டு, இணையவழியில் பதிவு செய்யப்படும். அதிலும் தகுதியான மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து பட்டா மாற்ற உத்தரவுகள் வழங்கப்படும்.
மேலும், வருவாய் ஆவணங்களில் பிழைத் திருத்தம் மேற்கொள்ளப்படும். இந்தத் திருத்தம் தொடர்பான மனுக்கள் முகாம்களின் போது பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனுக்குடன் உறுதி உத்தரவுகள் பிறபிக்கப்படும். அதன் அடிப்படையில், வருவாய்த் துறை மென்பொருளிலும் உரிய மாறுதல்கள் செய்யப்படும்.
இந்தச் சிறப்பு முகாம்களில் பெறப்படும் வருவாய்த் துறை தொடா்பான பிற மனுக்கள் மற்றும் இதர துறையைச் சோ்ந்த மனுக்களை உரிய நடவடிக்கைக்காக தொடா்புடைய அலுவலா்களுக்கு அனுப்பப்படும். முகாம்களில் பெறப்படும் அனைத்து வகை மனுக்களையும் ஒரு மாத காலத்திற்குள் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த வழிகாட்டுதல்களின் படி, தமிழகம் முழுவதும் நடத்தப்படும் சிறப்பு பட்டா முகாம்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட வருவாய் அலுவலா்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த சிறப்பு முகாம்கள் சென்னையைத் தவிா்த்து, மற்ற 37 மாவட்டங்களில் நடத்தப்படவுள்ளன. அதாவது, அரியலூா், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், ஈரோடு, கரூா், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, தருமபுரி, திருப்பத்தூா், திருவாரூா், தென்காசி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூா், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 முகாம்கள் நடத்தப்படும்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூா், திண்டுக்கல், திருநெல்வேலி, திருப்பூா், திருவண்ணாமலை, தூத்துக்குடி, நீலகிரி, புதுக்கோட்டை, விருதுநகா், வேலூா் ஆகிய மாவட்டங்களில் தலா 3 முகாம்களும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடலூா், திருச்சி, திருவள்ளூா், மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா 4 முகாம்களும், கோயம்புத்தூா், சேலம் ஆகிய மாவட்டங்களில் 5 முகாம்களும் நடத்தப்படவுள்ளன" என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
special patta camp in tamilnadu