'நான் பாடியதற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை'; மன்னிப்புக் கேட்டுள்ள பாடகர் வேல்முருகன்..!
Singer Velmurugan has apologized stating that the song he sang has no connection to Vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா நேற்று பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடகர் வேல்முருகன், பிரபலமான முருகன் பாடல் ஒன்றை விஜய்யை உருவகப்படுத்தி பாடியிருந்தார். அந்த பாடலுக்கு நடிகர் மற்றும் அக்கட்சியின் தலைவர் விஜய்யும் நடனமாடினார்.
அதாவது "மருதமலை மாமணியே முருகையா" என்ற புகழ்பெற்ற முருகன் பக்திப் பாடலை விஜய்க்கு ஏற்றவாறு மாற்றிப் பாடியிருந்தார். இது முருகப் பக்தர்களின் மனதைப் புண்படுத்தியதாக இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பாடல் வரிகளை மாற்றியதற்குத் தூண்டுதலாக இருந்ததாகக் கூறி, தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சி நிர்வாகி ராஜ்மோகன் மற்றும் பாடங்கள் வேல்முருகன் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு மன்னிப்புக் கோரியுள்ள பாடகர் வேல்முருகன், இதுதொடர்பாக பேசியுள்ளதாவது;
"நான் பாடியதற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முருகரை தவறாக பாடுவது என்பது என்னை நானே கத்தியால் குத்திக் கொள்வதற்கு சமம். இதற்கும், அக்கட்சி தலைவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நானும் தவறாக பாடவேண்டும் என்பதற்காக பாடவில்லை.
ஒருவேளை நான் தவறாக பாடியதுபோல் தோன்றினால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.
English Summary
Singer Velmurugan has apologized stating that the song he sang has no connection to Vijay