மருத்துவக் கழிவு ஆலை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம்; வெறிச்சோடிய மாமாமதுரை..!
Shops in Mamamadurai shut down in protest against opening of medical waste plant
மானாமதுரை சிப்காட்டில் மருத்துவக் கழிவு தொழிற்சாலை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், ஏ.முக்குளம் கிராமத்தில் மருத்துவக் கழிவு தொழிற்சாலை செயல்பட்டு வந்தது.
குறித்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு, புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, கருச்சிதைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து ஏ.முக்குளம் கிராமத்தில் மருத்துவக் கழிவு தொழிற்சாலை மூடப்பட்டது.

இதனையடுத்து குறித்த ஆலையை சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மாற்றும் பணி தற்போது நடைபெறுகிறது. இதற்காக சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு ஆலை கட்டுமான பணி முடிவடைந்து, அதை திறப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இங்கு 13 மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்படும் உயிரி மருத்துவக் கழிவுகளை இந்த ஆலையில் சுத்திகரிப்பு என்ற பெயரில் எரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு வெளியாகும் புகையினால் சுற்றுச்சூழல் மாசு மற்றும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கண்டித்து மானாமதுரை நகர மக்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், இவர்கள் மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில், இன்று மானாமதுரையில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதன்போது பால், குடிநீர், மருந்துக்கடை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் நகரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Shops in Mamamadurai shut down in protest against opening of medical waste plant