ஆச்சி மனோரமா வயிற்றில் குழந்தையுடன் பட்ட வேதனை.. மனோரமாவின் கண்ணீர் கதை! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் “ஆச்சி” என்று அன்போடு அழைக்கப்பட்ட மனோரமா, தனது வாழ்நாளையே சவால்களால் நிரப்பியவளாக இருந்தார். ஆனால் அந்த சவால்களை சாதனைகளாக மாற்றியவர் என்ற பெருமை என்றும் அவருடையது.

1958ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கை திரைப்படம், மனோரம்மாவுக்கு திரை உலகின் கதவைத் திறந்தது. அதில் நகைச்சுவை கதாபாத்திரம் செய்ய அழைக்கப்பட்ட போது, “நான் கதாநாயகியாக நாடகங்களில் நடித்து வருகிறேன். இப்போது எப்படி நகைச்சுவை நடிகையாக நடிப்பது?” என்று தயங்கினார் மனோரமா. அப்போது கண்ணதாசன், “கதாநாயகியாக நடித்தால் சில படங்களிலேயே முடியும். ஆனால் நகைச்சுவை நடிகையாக நடித்தால் உச்சியை அடைவீர்கள்” என்று சொன்னார். அந்த வார்த்தை அவருடைய வாழ்க்கையை மாற்றியது.

1937ஆம் ஆண்டு மன்னார்குடியில் கோபிசாந்தா என்ற பெயரில் பிறந்த மனோரமா, தந்தையின் குடும்ப பிரச்சனையால் தாயுடன் பிரிந்து காரைக்குடியில் வறுமையில் வளர்ந்தார். செட்டியார் வீடுகளில் வேலை செய்து வாழ்ந்த சிறுமி, வாழ்க்கையை மாற்றிக்கொள்ள 12 வயதிலேயே நாடகக் களத்தில் அடியெடுத்து வைத்தார். அப்போது தான் தனது பெயரை “மனோரமா” என மாற்றிக்கொண்டார்.

“பள்ளத்தூர் பாப்பா” நாடகத்தின் மூலம் புகழ்பெற்று, அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் நாடகங்களிலும் நடித்தார். அங்கிருந்தே சினிமா உலகிற்கான கதவு திறந்தது.

நாடகக் கம்பெனியில் மேனேஜராக இருந்த எஸ்.எம். ராமநாதனை காதலித்து, அம்மாவின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தரவில்லை. கருவிழப்புகள், கணவரின் பணத்திற்கான பேராசை, மேடை நாடகங்களில் கட்டாயப்படுத்தப்பட்ட நடிப்புகள் – இவை அனைத்தும் மனோரம்மாவின் மனதை சிதைத்தன. இறுதியில், கணவரை விட்டு பிரிந்து சினிமாவில் முழுமையாக கவனம் செலுத்தினார்.

அதன்பின் மனோரமாவின் சினிமா பயணம் ஏற்றமடைந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தமிழ் படங்களில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய முதல் நடிகை என்ற பெருமையும் அவருக்கே.

தனது பாணியால் நகைச்சுவைக்கு தனித்த அடையாளம் தந்தார். ஹீரோ, ஹீரோயின்களை மிஞ்சும் வகையில் நகைச்சுவை ராணியாக பாராட்டு பெற்றார்.

“செட்டியார் வீட்டில் வேலை செய்த எனக்கு, அதே செட்டிநாட்டு ராஜா, மேடையில் ‘ஆச்சி மனோரமா’ என்று அழைத்த தருணம் மறக்க முடியாதது” என்று ஒரு பேட்டியில் கண்கலங்கிக் கூறியிருந்தார்.

அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் நடந்த சினிமா விழாவில், தன் பிரபல வசனத்தை பேசி, “இப்போதே இறந்தாலும் மகிழ்ச்சியாக இறந்து விடுவேன்” என்று சொன்னார். சில வாரங்களிலேயே அந்த வார்த்தை நிஜமாகி, மனோரமா நம்மை விட்டுப் பிரிந்தார்.

வாழ்க்கை முழுவதும் கண்ணீரை சந்தித்தும், திரையில் சிரிப்பையே பரிமாறிய மனோரமா, தமிழ் சினிமாவின் வரலாற்றில் என்றும் “நகைச்சுவை தர்பாரின் அரசி” ஆகவே நிலைத்திருப்பார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aachi Manorama pain with the baby in her womb Manorama tearful story


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->