சிறுமியிடம் பாலியல் சீண்டல்...முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்!
Sexual harassment of a minor Court sentences the elderly man to 5 years in prison
திருநெல்வேலி மாவட்டம், அருகன்குளம் பகுதியில் 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
கடந்த 2020-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், அருகன்குளம், மேலூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் அதே ஊரை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் அடிப்படையில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு, ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சுரேஷ்குமார் வழக்கை விசாரித்து, நீதிமன்ற விசாரணை முடிவுற்ற நிலையில், ராமகிருஷ்ணனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, இன்று அவருக்கு தண்டனை வழங்கினார்.
5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம், 1 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேற்சொன்ன தண்டனைகளை, ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் , தூத்துக்குடி , சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. மற்றும் காவல்துறையினர், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் நடவடிக்கையால் 2025-ம் ஆண்டில் மட்டும், இதுவரை 21 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 22 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது.
English Summary
Sexual harassment of a minor Court sentences the elderly man to 5 years in prison