புதிய கட்சி தொடங்கும் செங்கோட்டையன்? சண்டை போட்டால் சிக்கல்..எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் செங்கோட்டையன்!
Sengottaiyan to start a new party If there is a fight there will be trouble Sengottaiyan raises the war flag against Edappadi
அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த தலைவர் செங்கோட்டையன், செப்டம்பர் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் “மனம் திறந்து பேசப்போகிறேன்” என அறிவித்துள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை இரண்டு முறை சந்தித்தது, பாஜகவில் இணையப்போவதாக ஊகங்களுக்கு வழிவகுத்தது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்திலும் இணையலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் பரவியது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “வரும் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மனம் திறந்து பேசுவேன். என்ன பேசப்போகிறேன் என்பதை அப்போது தெரிந்துகொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த அறிவிப்பு, எடப்பாடி பழனிசாமியைச் சுற்றியுள்ள அரசியல் சூழலை தீவிரமாக்கியுள்ளது.
இதற்கிடையே, கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா ஆகியோரின் படங்களுடன் பெரியார் புகைப்படத்தையும் செங்கோட்டையன் வைத்துள்ளார். பாஜக உடன் அதிமுக கூட்டணி நீடித்து வரும் சூழலில், பெரியார் புகைப்படம் வைக்கப்பட்டது பாஜகவை சீண்டுவதாக கருதப்படுகிறது. இதன் மூலம் செங்கோட்டையன் திமுக அல்லது தவெக பக்கம் நகர்கிறாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அதிமுக வட்டாரங்கள் கூறுகையில், “செங்கோட்டையன், கட்சியில் தமக்கு மதிப்பு இல்லை என்று நினைக்கிறார். எடப்பாடி யாரின் ஆலோசனையையும் கேட்காமல் தனிப்பட்ட முடிவுகளை எடுக்கிறார். இதனால் கட்சி பலவீனமடைந்துள்ளது. தினகரன், சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோரை சேர்க்க மறுப்பதும், அதிமுகவை தனிமைப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் தேர்தல் எடப்பாடிக்கு வாழ்வா சாவா என அமையும். இப்போதைக்கு செங்கோட்டையன் அமைதியாக இருந்தாலும், எதிர்காலத்தில் மோதலை தவிர்க்க முடியாது” என கருத்து தெரிவித்தனர்.
அதிமுக – பாஜக கூட்டணி புதிதாக உறுதியான நிலையில், செங்கோட்டையன் எடுக்கும் அடுத்தடுத்த நடவடிக்கை, கட்சியின் உள்ளக சமநிலையைப் பாதிக்கக் கூடும் என அரசியல் வட்டாரங்கள் கவனித்து வருகின்றன.
English Summary
Sengottaiyan to start a new party If there is a fight there will be trouble Sengottaiyan raises the war flag against Edappadi