''கவின்குமார் மரணத்தில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும்; சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்படவேண்டும்'': சீமான் வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


சாதிய ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின்குமார் மரணத்தில் தொடர்புடைய கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது குறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

''தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின்குமார் அவர்கள் பட்டப்பகலில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். ஆற்ற முடியாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பியின் குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். 

நவீனமும், அறிவியல் தொழில்நுட்பமும் உச்சப்பட்ச வளர்ச்சி பெற்றிருக்கும் தற்காலத்தில் நடந்தேறும் இத்தகைய ஆணவப் படுகொலைகள் நாகரீகச் சமுதாயத்தையே முற்றுமுழுதாகக்  கேள்விக்குள்ளாக்குகின்றன. தமிழினத்தின் ஓர்மையைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சாதிய வன்முறை வெறியாட்டங்களும், கொடுங்கோல் செயல்பாடுகளும் ஒருநாளும் ஏற்புடையதல்ல. சக மனிதரின் உயிரைப் பறிக்கும் கொடுஞ்செயல்கள் மனிதத்தன்மையே அற்றவை என்பதைத் தாண்டி, சாதியின் பெயரால் அவை நிகழ்த்தப்படுவது ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்கின்றன.
 
ஒரு ஆணும், பெண்ணும் மனமொத்து விரும்பி, வாழ்க்கையைத் தொடங்குவதற்கு எதிராக சாதியை நிறுத்துவதும், அந்த சாதிக்காகப் பச்சைப்படுகொலைகளை செய்வதும் மிருகத்தனத்தின் உச்சமாகும். சமத்துவத்திற்கும், சமூக அமைதிக்கும் எதிரான இத்தகைய சாதிய ஆணவப் படுகொலைகள் நம்மைக் கற்காலத்திற்கு இழுத்துச் செல்கின்றன.

ஆகவே, சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறைகளும், ஆணவக்கொலைகளும் முற்றாக நிறுத்தப்பட ஆளும் ஆட்சியாளர்கள் கடும் நடவடிக்கைகளையும், முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டியது பேரவசியமாகிறது. அந்தவகையில், சாதிய ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றவும், மனம்விரும்பி வாழ்க்கையைத் தொடங்கும் இணையர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யவும் வேண்டியது ஆளும் அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும்.
  
 ஆகவே, தம்பி கவின்குமார் அவர்கள் ஆணவப் படுகொலையில் தொடர்புடைய கொலையாளி சுர்ஜித், அதற்குத் துணைபோன பெற்றோரையும் சிறைப்படுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும், சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டுமெனவும் திமுக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.'' என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman insists that a separate law should be enacted against caste based honor killings


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->