வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தல்...! - நேரில் ஆய்வு செய்த திருநெல்வேலி கலெக்டர்...!
Security beefed up at counting centre Tirunelveli Collector inspects person
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், “ஒரு வாக்காளரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என்ற நோக்கில் மாவட்ட நிர்வாகம் முழுமையான விழிப்புணர்வு இயக்கத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்ற இலக்குடன், பொதுமக்களிடையே தேர்தல் முக்கியத்துவம் குறித்து உற்சாகமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.18 வயதை கடந்த ஒவ்வொரு வாக்காளரும் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளை பின்பற்றி திருநெல்வேலி மாவட்டத்தின் 5 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அணுகல் வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.கே.புரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, அம்பாசமுத்திரம் ராணி மேல்நிலைப்பள்ளி, திருவள்ளுவர் கல்லூரி போன்ற முக்கிய இடங்களில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான இரா. சுகுமார் நேரில் பார்வையிட்டு, பாதுகாப்பு மற்றும் வசதிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் ஒழுங்குபடுத்தப்பட்டு வரிசை எண்களுடன் சீராக அடுக்கி வைக்கப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் எளிதில் கண்காணிக்க ஏதுவாக பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணிகளும் வேகமெடுத்து நடைபெற்று வருகின்றன என்பதை மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டு உறுதி செய்தார்.
இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, (தேர்தல்) சுப்பிரமணியன், தேர்தல் வட்டாட்சியர் முருகன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டு பணிகளை ஒருங்கிணைத்தனர். ஜனநாயக திருவிழாவை சிறப்பாக நடத்த மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Security beefed up at counting centre Tirunelveli Collector inspects person