AI 'உழவர்' செயலி முதல் ரூ.7,432 கோடி இலவச மின்சாரம் வரை...! - த.வெ.க வின் முதல் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்...!
From AI Farmer app 7432 crore free electricity Minister Vinod presented first agriculture budget tvk
த.வெ.க. அரசின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். விவசாய உற்பத்தி, நவீன தொழில்நுட்பம், இயற்கை வளப் பாதுகாப்பு, மின்சார சலுகை, உயிர்ம உர ஊக்குவிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான புதிய அறிவிப்புகள் இடம்பெற்றன.நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் வினோத், முதல்முறையாக வேளாண் பட்ஜெட் தயாரிக்கும் முன் விவசாயிகள், விவசாய அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகள் நேரடியாக பெறப்பட்டதாக தெரிவித்தார்.

அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், செயல்பாட்டில் உள்ள பயனுள்ள திட்டங்கள் தொடர்வதோடு, புதிய மக்கள் நலத் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்."வேளாண்மை வளமானால் மட்டுமே மாநிலத்தின் பொருளாதாரமும், பிற துறைகளின் வளர்ச்சியும் உறுதியடையும்" என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வினோத் வலியுறுத்தினார்.
பயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் சேதத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டத்திற்காக ரூ.7.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.மக்காச்சோள உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் வகையில் மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.
விவசாயிகளுக்கு தடையற்ற மின்சார வசதியை உறுதி செய்யும் வகையில் இலவச வேளாண் மின்சாரத் திட்டத்திற்காக ரூ.7,432 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், உழவர் அடையாள அட்டை பெற்ற 3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 கோடி செலவில் மண்வள அட்டைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து, உயிர்ம உரப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், உயிர்ம உரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் வகையில், ஒவ்வொரு விவசாயிக்கும் தனிப்பயன் ஆலோசனைகள் மற்றும் சேவைகளை வழங்கும் ஏஐ அடிப்படையிலான 'உழவர்' செயலி உருவாக்கப்பட உள்ளது.
இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தரமான விதைகள் மூலம் விளைச்சலை அதிகரிக்கும் நோக்கில், நெல் விதை உற்பத்தி மற்றும் மானிய விநியோகத் திட்டத்திற்கு ரூ.34.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வினோத் அறிவித்தார்.மண்ணின் இயற்கை வளத்தை பாதுகாத்து, நீடித்த வேளாண் வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில் 'தமிழ்நாடு மண்வள பாதுகாப்பு இயக்கம்' செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்திற்காக ரூ.122.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், நிதிநிலை அறிக்கையை வாசித்தபோது முதலமைச்சர் விஜயை பாராட்டி அமைச்சர் வினோத் குறிப்பிட்ட சில கருத்துகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை மட்டுமே வாசிக்குமாறு சபாநாயகர் அமைச்சர் வினோத்துக்கு அறிவுறுத்தினார்.
English Summary
From AI Farmer app 7432 crore free electricity Minister Vinod presented first agriculture budget tvk