மதுரை: சாக்குமூட்டையில் கிடந்த 17 லட்சம் ரூபாய் பணம்! போலீசிடம் ஒப்படைத்த மாணவிக்கு குவியும் பாராட்டு!
school student madurai police
மதுரை சிம்மக்கல் அருகே உள்ள வக்கீல் புதுத்தெருவைச் சேர்ந்த செல்வகுமாரின் மகள் பொன் ரூபிணி (17), மீனாட்சி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு, அவர் தனது பெரியம்மா செல்வராணியுடன் அருகிலுள்ள கடைக்கு நடந்து சென்றபோது, சாலையோரத்தில் கேட்பாரற்று கிடந்த சாக்குமூட்டை ஒன்றை கவனித்தனர்.
சந்தேகத்துடன் அருகில் சென்று பார்த்தபோது, அந்த மூட்டையின் உள்ளே கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் ரோந்து வாகனத்திற்கும் தகவல் அளித்தனர்.
தகவல் பெறப்பட்டதும், விளக்குத்தூண் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அங்கு வந்து பணத்தைக் கைப்பற்றி நிலையத்துக்கு கொண்டு சென்றார். எண்ணிப் பார்த்ததில், மொத்தம் ரூ.17 லட்சத்து 49 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.
இந்தப் பணம் யாருடையது, எங்கிருந்து வந்தது, ஹவாலா முறையில் கடத்தப்பட்டதா அல்லது திருடப்பட்ட பணமா என்பதற்காக பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிலர் அந்தப் பணத்தை எங்கிருந்தோ எடுத்துச் செல்லும் போது பயத்தில் சாலையோரத்தில் வீசியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், சாலையில் கிடந்த பெரும் தொகையைத் தன்வசப்படுத்தாமல் நேர்மையுடன் போலீசாரிடம் ஒப்படைத்த மாணவி பொன் ரூபிணிக்கும், அவரது பெரியம்மா செல்வராணிக்கும் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, நேர்மையின் எடுத்துக்காட்டாக பொன் ரூபிணி பாராட்டுகளின் மையமாகியுள்ளார். பலரும் “இது தான் நம் சமுதாயத்திற்கு முன்மாதிரி நடத்தை” என புகழ்ந்து வருகின்றனர்.
English Summary
school student madurai police