சேலம் விபத்தில் அரசுப் பள்ளி மாணவர் உட்பட இருவர் பலி!
Salem Bike accident
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நேற்று நடைபெற்ற சாலை விபத்தில் அரசுப் பள்ளி மாணவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
வேப்பிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேஷின் மகன் ஜீவா (17), வெள்ளாளகுண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பில் படித்து வந்தார். சனிக்கிழமை இரவு 8 மணியளவில், மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கி தனது வீட்டிற்குத் திரும்பும் வழியில் மங்களபுரம் சாலையில் பைக்கில் பயணித்தார்.
அப்போது, பால் சொசைட்டி அருகே எதிரே வந்த சேலத்தைச் சேர்ந்த சூர்யா (25) ஓட்டிய மற்றொரு பைக்குடன் ஜீவா நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகினர். மோதி விழுந்ததில் ஜீவா பலத்த காயமடைந்து, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே உயிரிழந்தார்.
சூர்யா ஓட்டிய பைக்கில் பயணித்த கிரில் பட்டறை தொழிலாளி விஜயராஜன் (59) மற்றும் சூர்யாவும் படுகாயம் அடைந்தனர். இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி விஜயராஜன் நள்ளிரவில் உயிரிழந்தார். சூர்யா தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.
விபத்து தொடர்பாக வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.