கூவம், அடையாறு ஆறுகளுக்கு புத்துயிர்! பன்னாட்டு நிறுவனங்களுடன் புதிய திட்டம்! விஜய் போடும் மெகா பிளான்! - Seithipunal
Seithipunal


சென்னை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை முழுமையாகத் தூய்மைப்படுத்தி, மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் திட்ட அறிக்கையைத் தயாரிக்க பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெறும் வகையில் உலகளாவிய டெண்டர் கோரப்பட உள்ளது.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், சென்னை நகரின் நதிகளை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மாற்றும் திட்டம் குறித்து நிதியமைச்சர் என். மரிய வில்சன் அறிவித்தார். கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் படகு சவாரி செய்யவும், குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடவும், அனைத்து வயதினரும் சுத்தமான ஆற்றங்கரைகளில் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யவும் ஏற்ற சூழலை உருவாக்குவதே திட்டத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நதி சீரமைப்புப் பணிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ஆற்றங்கரையோரம் வசித்த குடும்பங்களை மாற்று இடங்களில் குடியமர்த்துதல் மற்றும் பாதுகாப்புச் சுவர்கள் அமைத்தல் போன்ற பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

ஆனால், புதிய திட்டத்தில் நதியின் நீர்த் தரத்தை மேம்படுத்துவதற்கும், ஆற்றங்கரையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. உலகின் பல்வேறு நகரங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நதி சீரமைப்புத் திட்டங்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப சென்னைக்கு ஏற்ற ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க ஆலோசனைக் குழு தேர்வு செய்யப்பட உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஆறுகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் பிரதான பாதாள சாக்கடை குழாய்கள் அமைத்தல், பூங்காக்கள், நடைபாதைகள், சைக்கிள் பாதைகள் மற்றும் வெள்ளத் தடுப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுவரை கூவம் ஆற்றங்கரையில் வசித்து வந்த சுமார் 23,000 குடும்பங்களும், அடையாறு ஆற்றங்கரையில் வசித்து வந்த சுமார் 12,000 குடும்பங்களும் பாதுகாப்பான மாற்று இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள குறைந்த எண்ணிக்கையிலான குடும்பங்களுக்கும் விரைவில் மாற்று வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, நதி சீரமைப்புப் பணிகள் வேகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, மாநிலத்தின் நகர்ப்புற கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், 2026-27 நிதியாண்டின் திருத்தப்பட்ட பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.29,863 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய இடைக்கால பட்ஜெட் மதிப்பீட்டை விட இது ரூ.1,636 கோடி கூடுதல் நிதியாகும்.

இந்த நிதியின் மூலம் மாநகராட்சிகளில் நவீன சாலைகள், தனி நடைபாதைகள், சைக்கிள் பாதைகள், பாதுகாப்பான பள்ளி மண்டலங்கள் மற்றும் நவீன எல்.இ.டி. தெருவிளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

மேலும், சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களை விநியோக நிலையங்களுடன் இணைக்கும் வகையில் ரூ.3,108 கோடி மதிப்பில் ‘ரிங் மெயின் பைப்லைன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் 2031ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் ‘இன்டெலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம்’ அமைக்கும் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதேபோல், நகரின் முக்கிய 20 இடங்களில் நவீன ‘ஸ்மார்ட் பார்க்கிங் மேனேஜ்மென்ட்’ முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை சீரமைப்பதில் கடந்த காலங்களில் கழிவுநீர் கலப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் முக்கிய சவால்களாக இருந்த நிலையில், தற்போது பன்னாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்பட்டால், நீண்ட காலமாக மாசடைந்த நிலையில் காணப்படும் கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் மீண்டும் சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறுவதுடன், பொதுமக்கள் பொழுதுபோக்கு மற்றும் நடைப்பயிற்சிக்குப் பயன்படுத்தக்கூடிய அழகிய நீர்வழிப் பகுதிகளாகவும் உருவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Reviving the Cooum and Adyar rivers A new project with multinational companies Vijay mega plan


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->