'தமிழுக்கு முதலிடம்... சட்டசபையில் அதிரடி'...! அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்...முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம்...!
Tamil comes first Action Assembly first tamil thai vaazhththu mandatory at government functions Chief Minister Vijay special resolution
தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை அமைப்புகளின் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை கட்டாயமாக்கும் வகையில் சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியதும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் என்ற கோமுகி மணியன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசினர் தீர்மானத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழ் உலகின் தொன்மையான செம்மொழிகளில் ஒன்றாக விளங்குவதாகவும், தமிழர் நாகரிகம் நீண்டகால பண்பாட்டு மரபையும் வரலாற்றுச் சிறப்பையும் கொண்டதாகவும் சட்டசபை பெருமையுடன் பதிவு செய்வதாக தெரிவித்தார்.
மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய மனோன்மணியம் நாடக நூலின் பாயிரத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளில் இருந்து தமிழ்த்தாய் வாழ்த்து உருவானதாகவும், கடந்த 1970-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி முதல் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, 2021-ம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி முதல் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மாநில பாடல் என்ற அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் முதல்-அமைச்சர் தெரிவித்தார்.இதன்படி தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்ற நடைமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், 2026-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்திலும் மாநில பாடல் பாடுவது தொடர்பான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.தமிழ்த்தாய் வாழ்த்து என்பது வெறும் பாடல் மட்டுமல்ல; தமிழ்மொழிக்கும், தமிழர் பண்பாட்டுக்கும் வழங்கப்படும் மரியாதையின் அடையாளம் என முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழகத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தை பாதுகாக்கும் நோக்கில், தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என சட்டசபை ஏகமனதாக தீர்மானிப்பதாக அவர் தெரிவித்தார்.முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்த இந்த அரசினர் தனித்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Tamil comes first Action Assembly first tamil thai vaazhththu mandatory at government functions Chief Minister Vijay special resolution