கட்சியைக் கடந்து ஒன்றுபட்ட தலைவர்கள்...! தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுத்து வரலாற்றுத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்...!
Leaders who united across party lines Giving priority Tamil Motherland historic resolution passed unanimously
தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.

விடுமுறைக்குப் பின்னர் தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார்.
தீர்மானத்தை முன்வைத்து பேசிய முதலமைச்சர் விஜய், தமிழ் மொழியின் தொன்மையையும், தமிழர்களின் வரலாறு மற்றும் பண்பாட்டு பெருமையையும் எடுத்துரைத்தார்.தமிழ் என்பது வெறும் தொடர்புக்கான மொழி மட்டுமல்ல; தமிழர்களின் சிந்தனை, உணர்வு, பண்பாடு, நாகரிகம் மற்றும் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்த அடையாளம் என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழின் பெருமையையும் தமிழ்த்தாய் வாழ்த்தின் மாண்பையும் பாதுகாப்பதில் தவெக அரசு எந்த சமரசத்திற்கும் இடமளிக்காது என்றும் தெரிவித்தார்.நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டியதில்லை என்றும், மொழியின் மீதான மரியாதை என்ற அடிப்படையில் இதனை அனைவரும் அணுக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், கட்சி வேறுபாடுகளை கடந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானத்திற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக பேசினர்.இதையடுத்து தீர்மானம் மீது சட்டசபையில் ஒப்புதல் பெறப்பட்டது. இறுதியில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
English Summary
Leaders who united across party lines Giving priority Tamil Motherland historic resolution passed unanimously