'எல்லையில் நிலவும் பதற்றம்'...! - கர்நாடகாவுக்கு தமிழக பேருந்துகள் இயங்குமா...? விடிய விடிய குவிக்கப்படும் காவலர்கள்...!
Extreme tension border Will Tamil Nadu buses run to Karnataka Guards being deployed day by day
காவிரி நீர் பங்கீடு தொடர்பான விவகாரம் மீண்டும் இருமாநிலங்களுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், அங்குள்ள அணைகளில் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடுவதில் கர்நாடகத்துக்கு தொடர்ந்து நெருக்கடி நிலவி வருகிறது.
இந்நிலையில், மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து, அணைக்கு வந்து சேரும் உபரிநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.அதே நேரத்தில், தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு கர்நாடக விவசாயிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

காவிரி நீர் விவகாரத்தை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்டமாக கர்நாடகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தவும் கன்னட கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ள இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஆனால், எந்த சூழ்நிலையிலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என கன்னட கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இதன் முன்னோட்டமாக, கர்நாடகா–தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் இன்று போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறுகையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்பட வேண்டும் என்றும், கர்நாடக விவசாயிகளுக்கே போதிய தண்ணீர் இல்லாத நிலையில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
மேலும், இந்த கோரிக்கைகளை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை 11 மணிக்கு அத்திப்பள்ளியில் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.போராட்டத்தின்போது தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்குள் வரும் தமிழக அரசு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தப் போவதாக கன்னட கூட்டமைப்பு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து எந்த வாகனத்தையும் கர்நாடக எல்லைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு இருமாநில எல்லைப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் இன்று தமிழக அரசு பேருந்துகள் உள்ளிட்ட தமிழ்நாட்டில் இருந்து அத்திப்பள்ளி வழியாக கர்நாடகத்துக்குச் செல்லும் வாகனங்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. வாகனங்கள் வழக்கம்போல் எல்லையை கடக்க அனுமதிக்கப்படுமா அல்லது எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.
English Summary
Extreme tension border Will Tamil Nadu buses run to Karnataka Guards being deployed day by day