பபாசி 50-ஆம் ஆண்டு பொன்விழா சென்னை புத்தகக் காட்சி; ஜன.7 முதல் 19 வரை; இலச்சினையை வெளியிட்ட ஜே.சி.டி.பிரபாகர்..!
JCD Prabhakar unveiled the logo for the BAPASI 50th anniversary Golden Jubilee Chennai Book Fair
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் சென்னை புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
பபாசி 50-ஆம் ஆண்டு பொன்விழா சென்னை புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் அடுத்த ஆண்டு ஜன.07 ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 50-ஆம் ஆண்டு பொன்விழா புத்தகக் காட்சிக்கான இலட்சினை (லோகா) வெளியீட்டு நிகழ்ச்சி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் இன்று நடந்தது. சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் இதற்கான இலட்சினையை வெளியிட்டார்.
மேலும், சென்னை புத்தகக் காட்சிக்கான புதிய இணையதளத்தையும் (www.chennaibookfair.com) தொடங்கி வைத்து உரையாற்றினார். பபாசி சென்னை புத்தகக் காட்சி நடத்துவதற்கான மானிய நிதியை முதல்வர் விஜய் ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தி வழங்கியதை வரவேற்கிறேன்.
50-ஆம் ஆண்டு பொன்விழா புத்தகக் காட்சி அடுத்த ஆண்டு ஜன.7-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. தொலைநோக்குப் பார்வையோடு கடந்த 50 ஆண்டு காலமாக இந்த புத்தகக் காட்சியை நடத்துவது பாராட்டுக்குரியது. இந்த நேரத்தில் பபாசி முன்னாள் தலைவர்களையும் நிர்வாகிகளையும் நினைவுகூர வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வாசிப்பு பழக்கத்தை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும், பள்ளிகளில் வாசிப்பு என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தி பரிசு வழங்க வேண்டும் என்று பபாசி அமைப்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, அதற்கான பரிசுத் செலவை தான் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது தொகுதி எம்எல்ஏ அலுவலகம் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அலுவலகத்தில் ஒரு நூலகம் அமைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது, எம்எல்ஏ-வைப் பார்க்க வரும் பொதுமக்கள், காத்திருக்கும் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க இந்த நூலகம் பயனுள்ளதாக இருக்கும் என்றும், இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏ-க்களு்ம தங்கள் தொகுதி அலுவலகத்தில் ஒரு நூலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வெளியிட முடியாத சூழலில் உள்ள தரமான புத்தகங்களை ஒரு குழு அமைத்து தேர்வு செய்து அதை அரசு சார்பில் வெளியிடலாம் என்றும், இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் பேசியுள்ளார்.
English Summary
JCD Prabhakar unveiled the logo for the BAPASI 50th anniversary Golden Jubilee Chennai Book Fair