காலி மதுபாட்டில்களுக்கு ‘ரிட்டர்ன்’ கட்டளை...! - டாஸ்மாக்குக்கு நீதிமன்றம் கடும் உத்தரவு
Return order empty liquor bottles Court issues strict order TASMAC
வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்ச், ஊட்டி, கொடைக்கானல், மேகமலை உள்ளிட்ட முக்கிய மலைப் பகுதிகளில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு நேற்று மீண்டும் அதே சிறப்பு டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல் கே.சதீஷ்குமார், “காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தற்போது 22 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காஞ்சீபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பாதியளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மீதமுள்ள மாவட்டங்களிலும் வருகிற 31-ஆம் தேதிக்குள் இந்த திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும்” என்று நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.இதற்கிடையில், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் தனி வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், “டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பெரும்பாலும் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்கள். இந்நிலையில், காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுதல், அதற்கான பணத்தை வாடிக்கையாளர்களுக்கு திருப்பி வழங்குதல் போன்ற கூடுதல் பணிச்சுமை ஏற்படும். எனவே, இந்த பணிக்காக கூடுதல் ஊழியர்களை நியமிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், இந்த வழக்கில் எங்களையும் மனுதாரர்களாக சேர்க்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் ஊழியர்களை டாஸ்மாக் நிர்வாகம் நியமிக்க வேண்டும்” என்று தெளிவாகக் கூறினர்.
மேலும், வருகிற 31-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அளித்த உத்தரவாதத்தை பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், வழக்கின் மேலான விசாரணையை 2026-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
English Summary
Return order empty liquor bottles Court issues strict order TASMAC